

ஐதராபாத் எம்பி-யும் ஏஐஎம்எம் தலைவருமான அசாதுதின் ஒவைசி கொரோனாவைரஸ் பாதிப்பு கட்டுக்கதை என்றும், அரசு இதை கொண்டு மக்களை ஏமாற்றி வருவதாக கருத்து தெரிவித்தார் என சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது.
வைரல் தகவல்களுடன் ஒவைசிக்கு கொரோனா பாதிப்பை கண்டறியும் சோதனை நடத்தப்படுவது போன்ற புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன், 'இவர் தான் கொரோனாவைரஸ் இல்லை என்றும், அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருவதாகவும் கூறினார்' என்ற வாக்கில் தலைப்பிடப்பட்டு உள்ளது.
கொரோனாவைரஸ் பற்றி ஒவைசி கருத்து கூறினாரா என இணையத்தில் மேற்கொண்ட ஆய்வில், கொரோனாவைரஸ் இல்லை என ஒவைசி கூறியதாக எந்த அறிக்கையும் கிடைக்கப்பெறவில்லை. எனினும், கொரோனாவைரஸ் பாதிப்புக்கு எதிராக மக்களுக்கு ஒவைசி வழங்கிய உதவிகள் பற்றிய தகவல்களே கிடைத்தன.
இத்துடன் கொரோனாவைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் தியாகிகள் என்றும் இவர்களது உடல்கள் கவசம் இன்றி அடக்கம் செய்யலாம் என ஒவைசி தெரிவித்தார். மேலும் இஸ்லாம் மதத்தவர் இறுதி சடங்குகளில் அதிகளவில் ஒன்றுகூடுவதை தவிர்க்க விரைவில் ஜனாஸா மேற்கொண்டு அடக்கம் செய்யவும் வலியுறுத்தி இருந்தார்.
அந்த வகையில் கொரோனாவைரஸ் இல்லை என்றும் மக்களை அரசாங்கம் ஏமாற்றி வருவதாக அசாதுதின் ஒவைசி கருத்து கூறவில்லை என உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.