

புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி விற்பனை செய்த 1,241 கிலோ பட்டாசு பறிமுதல் செய்யப்பட்டது என டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
டெல்லியை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், கடந்த ஆண்டு தீபாவளியின் போது பட்டாசுகள் வெடித்ததால் காற்று மாசுபாடு அதிகரித்தது. எனவே, இந்த ஆண்டு பட்டாசுகள் விற்க தடைவிதிக்க வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தீபாவளியை முன்னிட்டு டெல்லி பிராந்தியத்தில் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து கடந்த வாரம் உத்தரவிட்டது. காற்று மாசுபாடு அதிகரித்ததன் காரணமாக இந்த தடை விதிக்கப்படுகிறது என தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவால் இந்த ஆண்டு டெல்லியில் பட்டாசுகளை விற்க முடியாமல் வியாபாரிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் பட்டாசுகள் விற்க சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ள நிலையில், சிலர் பட்டாசுகளை அனுமதியின்றி விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள 13 மாவட்டங்களில் போலீசார் தங்களது சோதனையை நடத்தினர். இதில் சுமார் 1,241 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. பட்டாசுகளை விற்றது தொடர்பாக 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.