

திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில், கைத்தறி மற்றும் துணிநூல் நெசவாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் சுந்தரவல்லி தலைமை வகித்தார். இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு பேசியதாவது:-
கைத்தறித் துணிகள் என்பது மிகவும் தொன்மையானதாகும். தற்போதைய நிலையில் பாலியஸ்டர் புடவைகள் வரவாலும், விசைத்தறிகளாலும் கைத்தறி ஆடை உற்பத்தி நலிவடைந்துள்ளது.
தற்போது இயற்கைச் சாயத்தைப் பயன்படுத்தி பொதுமக்கள் விரும்பும் ரகங்களில் கைத்தறி புடவைகளை உற்பத்தி செய்து வருகிறோம்.
அதோடு, ஆன்லைன் வர்த்தகமும் தொடங்கியுள்ளதால் கைத்தறிப் புடவைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
துணிச் சந்தையில் போட்டியை சமாளிக்கவும், கைத்தறித் தொழிலாளர்களைக் காப்பாற்ற வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. இந்த தொழில் முதியோர்களோடு முடிந்து விடக்கூடாது. இளம் தலைமுறையினரிடமும் இதைக் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதில் அரசு முனைப்போடு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு ஆகிய பகுதிகளில் உள்ள கைத்தறிச் சங்கங்கள் பல்வேறு புதிய ரகங்களை உற்பத்தி செய்கின்றன.
இதற்காக மத்திய கூட்டுறவு வங்கி மூலம் காசுக் கடன், முத்ரா கடன் என நெசவாளர்களுக்கு ஒரு தறிக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையில் 6 சதவீத வட்டியில், 10 சதவீதம் மானியமாகவும் கடன் வழங்கப்படுகிறது.
இதை மற்ற மாவட்ட நெசவாளர்கள் பயன்படுத்தி வரும் நிலையில், இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்த முடியாத நிலையிருந்து வருகிறது.
எனவே, இங்குள்ள தொழிலாளர்கள் பயனடையும் வகையில் புதிய ரகங்களை உற்பத்தி செய்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தயாராக உள்ளது என்றார்.
இதனைத் தொடர்ந்து நிருபர்களிடம் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியதாவது:-
காவிரியை யாரும் உரிமை கொண்டாட முடியாது என்ற தீர்ப்பு மகிழ்ச்சி தரக் கூடியதாக உள்ளது. 450 பக்கம் கொண்ட முழு விவரமும் தெரிந்த பிறகே சாதக பாதகங்களை பார்த்து தமிழக அரசு சார்பில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க.வை பொறுத்த வரை தெலுங்கு கங்கை திட்டமாக இருந்தாலும் சரி, வீராணம் மற்றும் காவிரி பிரச்சினையாக இருந்தாலும் தமிழகத்திற்கு வந்து சேர விடாமல் தடுத்தவர்கள்.
பொதுப்பணித்துறை அமைச்சராக கருணாநிதி இருந்த போது கபினி ஹேமாவதி, அணைகள் கட்டிக் கொள்வதால் சேதாரம் ஏதும் வராது என்று சொன்னவர். எனவே தமிழகத்தின் நீராதாரங்களைப் பற்றி பேசுகிற தார்மீக உரிமை தி.மு.க.வினருக்கு கிடையாது.
கைத்தறிக்கு என்று ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத் தறியாளர்கள் நெய்வார்களேயானால் அவர்களை கண்டுபிடித்து தண்டிக்க தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பாண்டியராஜன், திருத்தணி எம்.எல்.ஏ. நரசிம்மன், கைத்தறித் துறை இயக்குநர்முனிநாதன், முதன்மைச் செயலர் பனிந்தர் ரெட்டி, கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் வெங்கடேஷ் மற்றும் கைத்தறிச் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், நெசவாளர்கள் கலந்து கொண்டனர். #tamilnews #osmanian #dmk #cauverywater