

அ.தி.மு.க. அம்மா அணியில் மொத்தம் 122 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள்.
அந்த அணியை வழி நடத்தி செல்லும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவாகி மோதல் ஏற்பட்டுள்ளது.
டி.டி.வி.தினகரன் சமீபத்தில் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ததால் மோதல் முற்றியுள்ளது. தினகரனுக்கு ஆதரவாக 18 முதல் 20 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். என்றாலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பயப்படாமல் தினகரனை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
“டி.டி.வி.தினகரன் துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டது சட்ட விரோதமானது. எனவே அவருக்கு அ.தி.மு.க.வினர் யாரும் கட்டுப்பட வேண்டியதில்லை” என்று எடப்பாடி பழனிசாமி தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இது தினகரனுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
எடப்பாடி பழனிசாமிக்கு தினகரன் சூடான பதிலடி கொடுத்தார். அவர் கூறுகையில், “அ.தி.மு.க. எங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டாமலேயே யாரையும் நீக்கும் அதிகாரம் எனக்கு உள்ளது. அளவுக்கு மீறி நடந்து கொண்டால் அ.தி.மு.க. எதிர்கால நலன் கருதி, பயம் இல்லாமல் நான் எந்த நட வடிக்கையையும் துணிச்சலாக எடுப்பேன்” என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “அ.தி.மு.க. ஆட்சியும் கட்சியும் இரட்டை தண்டவாளங்கள் போன்றது. தடம் மாறாமல் சென்றால் ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் வராது. 4 ஆண்டுகள் ஆட்சி நீடிக்குமா? என்பதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களிடம் தான் கேட்க வேண்டும்” என்றார்.
டி.டி.வி.தினகரன் மட்டுமின்றி அவரது ஆதரவாளர்களும் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அச்சுறுத்தும் வகையில் பேட்டியளித்தனர். சில அமைச்சர்களும் கூட டி.டி.வி.தினகரனை ரகசியமாக தொடர்பு கொண்டு பேசியதாக தெரிகிறது. இது எடப்பாடி பழனிசாமியிடமும் அவரது தீவிர ஆதரவாளர்களிடமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினகரன் தனது 20 எம்.எல்.ஏ.க்களையும் ராஜினாமா செய்ய வைத்தால், எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 102 ஆக சரிந்து விடும். அப்போது ஆட்சி நீடிக்க தேவையான 117 எம்.எல்.ஏ.க்கள் தேவையை அவரால் பூர்த்தி செய்ய இயலாமல் போகலாம்.
ஓ.பி.எஸ். அணியின் 11 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்தால் கூட, 113 எம்.எல்.ஏ.க்கள்தான் இருப்பார்கள். இதனால் ஆட்சி கவிழும் அபாயம் உருவாகும். இந்த அபாயத்தை எப்படி தவிர்ப்பது என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.
டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க.வில் இருந்து விலக்கி வைத்து விட்டு ஆட்சியைத் தொடர வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். அதே சமயத்தில் தினகரன் பக்கம் உள்ள எம்.எல்.ஏ.க்களை எப்படி இழுப்பது என்றும் ஆலோசித்து வருகிறார்.
தற்போதைய சூழ்நிலையில் ஆட்சி கவிழ்ந்து விடக்கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், தினகரன் மூவருமே கவனமாக இருக்கிறார்கள். ஆட்சி கவிழ்ந்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதை மூவரும் உணர்ந்துள்ளனர். எனவே அந்தரத்தில் கயிற்றில் நடப்பது போன்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அ.தி.மு.க. அணிகள் இணைந்தாலும் ஆட்சி நீடிக்குமா? என்ற உத்தரவாதம் இல்லையே என்ற கவலை ஓ.பி.எஸ். அணியினருக்கு ஏற்பட்டுள்ளது. சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் முழுமையாக அ.தி.மு.க.வில் இருந்து விலக்கினால்தான் ஆட்சியை மீதமுள்ள 4 ஆண்டுகளும் சுமூகமாக நடத்த முடியும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
ஆனால் தினகரனுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சர் பழனிசாமி சசிகலாவுக்கு எதிராக இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பதவி வகிப்பது செல்லுமா? செல்லாதா? என்று தேர்தல் கமிஷன் தீர்ப்பு வழங்கும் வரை காத்து இருக்கலாம் என்று ஓ.பி.எஸ். அணியினர் முடிவுக்கு வந்துள்ளனர்.
சசிகலா விவகாரத்தில் தெளிவான முடிவு எட்டப்பட்ட பிறகு அ.தி.மு.க. அணிகள் இணைப்பு பேச்சு வார்த்தையில் தீவிரம் காட்டலாம் என்று அவர்கள் தீர்மானித்துள்ளனர். இதன் காரணமாக அ.தி.மு.க. அணிகள் இணைப்பு முயற்சிகளில் திடீர் முடக்கம் ஏற்பட்டுள்ளது.