ஊழல் குற்றச்சாட்டு: கமலஹாசன் கருத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு

ஊழல் குற்றச்சாட்டு கருத்து தெரிவித்திருந்த நடிகர் கமலஹாசனுக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அணியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஊழல் குற்றச்சாட்டு: கமலஹாசன் கருத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு
Published on

சென்னை:

கமலஹாசனுக்கு எடப்பாடி அணி எதிர்ப்பும், தி.மு.க. ஆதரவும் தெரிவித்த நிலையில் ஓ.பி.எஸ். அணி எந்த கருத்தையும் வெளியிடாமல் இருந்தது.

இந்த நிலையில் இன்று கமலஹாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியதாவது:-

ஜனநாயக நாட்டில் எந்த ஒரு குடிமகனுக்கும் ஆட்சியாளர்களை விமர்சிக்கும் உரிமை உண்டு. அந்த வகையில் நடிகர் கமலஹாசன் விமர்சித்துள்ளார். அவரது விமர்சனத்தை ஆட்சியாளர்கள் கேட்டறிந்து உரிய பதில் சொல்ல வேண்டும். அதற்கு மாறாக அவர் மீது கோபப்படுவது இயற்கைக்கு மாறானது. அரசியல் கோட்பாடுகளுக்கு மாறானது.

ஒருவர் குறை சொல்லும் போது அதற்கு பதில் சொல்ல வேண்டுமே தவிர தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவோ, பழிக்கவோ கூடாது. கமலை குறை சொன்னால் அவர்களது மரியாதைதான் குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் இதுபற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-

ஜனநாயகத்தில் ஒரு ஆட்சியை பற்றி கருத்து சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு. அந்த வகையில் கமலஹாசன் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இதற்காக அவரை எதிர்ப்பது சரியல்ல.

ஆளும் கட்சியினர் இந்த ஆட்சியை வழி நடத்துவதில் மெத்தன போக்கோடு நடந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com