திருப்பதி கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் விலையை உயர்த்த எதிர்ப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விலையை உயர்த்த கூடாது என ராயலசீமா போராட்ட சமிதியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருப்பதி கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் விலையை உயர்த்த எதிர்ப்பு
Published on

திருமலை:

திருப்பதி ஏழுமலையானுக்கு பல்வேறு சேவைகள் நடைபெற்று வருகின்றன. இந்த சேவைகளில் திரளான பக்தர்கள் கட்டணம் செலுத்தி பங்கேற்று சாமியை தரிசித்து வருகின்றனர். நேர்த்திக் கடனாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆர்ஜித சேவைகளில் பங்கேற்கின்றனர்.

கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ர தீபஅலங்கார சேவை, ஏகாந்த சேவை, ஊஞ்சல் சேவை, சுப்ரபாதம், ஏகாந்த சேவை போன்ற தினசரி சேவைகள் மட்டுமின்றி, விஷேச பூஜை (திங்கள்), அஷ்டதள பாத பத்மாராதனை (செவ்வாய்), சகஸ்ர கலசாபிஷேகம் (புதன்), திருப்பாவாடை சேவை, பூங்கி சேவை (வியாழன்), அபிஷேகம் (வெள்ளி) என வாராந்திர சேவைகள் நடத்தப்படுகிறது.

இந்த சேவைகளுக்கு ரூ.600 முதல் 12,250 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தற்போது அனைத்து ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விலையை உயர்த்த ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு பக்தர்களிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராயலசீமா போராட்ட சமிதி எனும் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தரிசன டிக்கெட்டுகள், ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள், லட்டு பிரசாத விலைகளை உயர்த்துவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த திட்டத்தை தேவஸ்தானம் உடனடியாக கைவிட வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் கூறியதாவது:-

ஏழுமலையானை ஆர்ஜித சேவையில் பக்தர்கள் பலர் தரிசித்து வருகின்றனர். ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தியதில் இருந்து திருமலையில் லட்டு பிரசாதம், வாடகை அறை உள்ளிட்டவற்றின் கட்டணத்தை தேவஸ் தானம் உயர்த்தியது.

இந்நிலையில் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் கட்டணத்தையும் உயர்த்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாயின.

ஆனால் ஆர்ஜித சேவா டிக்கெட் கட்டணங்களில் தற்போது உயர்வு இல்லை. ஆனால் சில தரிசன டிக்கெட் கட்டணங்களை உயர்த்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

தேவஸ்தானத்தில் பணியாற்றி வரும் வேற்று மத ஊழியர்கள் பணி மாற்றம் குறித்து ஐதராபாத் ஐகோர்ட்டு உத்தரவின்படி முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. தர்ம தரிசன பக்தர்களுக்கு விரைவில் நேர ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படும். அதற்கான ஏற்பாடுகள் விரைவாக நடைபெற்று வருகிறது என்றார். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com