

புதுடெல்லி:
125 கோடி மக்களின் ஆதரவு இல்லாமல் தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கத்தை அடைய முடியாது என்று பிரதமர் மோடி கூறினார்.
தூய்மை இந்தியா திட்டத்தின் 3-வது ஆண்டு விழாவையொட்டி, டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 3 ஆண்டுகளுக்கு முன் கையில் துடைப்பத்தை எடுத்து நான் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தபோது பலர் என்னை கடுமையாக விமர்சித்தார்கள்.
விமர்சனங்களை தாங்கும் வலிமையை நான் பெற்று இருக்கிறேன். எத்தனையோ விமர்சனங்கள் இருந்தாலும் எந்த தயக்கமும் இல்லாமல், மகாத்மா காந்தி காட்டிய வழியில் கடந்த 3 ஆண்டுகளாக நான் எனது பணிகளை செய்து வருகிறேன்.
நாட்டு மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும். 125 கோடி மக்களின் ஒத்துழைப்பு, பங்களிப்பு இல்லை என்றால் 1,000 மகாத்மா காந்திகள் வந்தாலும், ஒரு லட்சம் நரேந்திர மோடிகள், முதல்-மந்திரிகள் மற்றும் அரசாங்கங்கள் வந்தாலும் தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கத்தை நம்மால் அடைய முடியாது.
நாட்டில் சுகாதாரத்தை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமான ஒன்று. இதன்மூலம் நாட்டில் மாற்றத்தை உருவாக்க வேண்டும். எனவே தூய்மை இந்தியா திட்டத்தை அரசியல் ஆக்கவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தூய்மை இன்மையால் நாட்டில் ஏராளமான குழந்தைகள் மரணம் அடைகின்றன. எனவே உணவு அருந்துவதற்கு முன் கைகளை நன்றாக கழுவ வேண்டியதன் அவசியத்தை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.
5 ஆண்டுகளுக்கு முன் பள்ளிக்கூடங்களை அங்கு படிக்கும் குழந்தைகள் சுத்தம் செய்த போது, ஆசிரியர்களை பெற்றோர்கள் குறை கூறி அதை சர்ச்சைக்குரிய பிரச்சினை ஆக்கினார்கள். ஆனால் இப்போது தாங்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள அங்கு படிக்கும் பிள்ளைகள் பெரிதும் உதவியாக இருக்கிறார்கள். இது ஆக்கபூர்வமான மாற்றம் ஆகும். அந்த வகையில் குழந்தைகள் இந்த திட்டத்தின் தூதுவர்களாக இருப்பது பாராட்டத்தக்கது.
தூய்மை இந்தியா திட்டத்தின் முக்கியத்துவம் பற்றி மக்களிடம் எடுத்துச் செல்வதில் ஊடகங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
போக்குவரத்து சந்திப்புகளில் போதிய கழிவறைகள் இல்லாததால் பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். வீட்டுக்கு வரும் வரை அவர்கள் மிகவும் சிரமப்படவேண்டி இருக்கிறது. இதனால் அவர்களுக்கு சுகாதார பிரச்சினையும் ஏற்படுகிறது. எனவே அதுபோன்ற இடங்களில் போதிய கழிவறைகளை அமைப்பது மிகவும் அவசியம் ஆகும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.