கொடுங்கையூர் பேக்கரி தீ விபத்தில் மேலும் ஒருவர் பலி

கொடுங்கையூர் பேக்கரி கடை தீ விபத்தில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் இறந்ததால், பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
கொடுங்கையூர் பேக்கரி தீ விபத்தில் மேலும் ஒருவர் பலி
Published on

பெரம்பூர்:

கொடுங்கையூர் மீனாம்பாள் நகரில் உள்ள பேக்கரி கடையில் கடந்த 15-ந் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கடை ‌ஷட்டரை உடைத்து தீயை அணைக்க முயன்றபோது அங்கிருந்த கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின.

இதில் தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு வீரர்கள் உள்பட 48 பேர் உடல் கருகினர். கடையில் பிடித்த தீயை வேடிக்கை பார்க்க வந்தவர்களும், செல்போனில் படம் பிடித்தவர்களும் அதிக அளவில் இதில் சிக்கிக் கொண்டனர்.

அவர்களுக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலும், ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு தீயணைப்பு வீரர் ஏகராஜ், பேக்கரி கடை உரிமையாளர் ஆனந்தன் உள்பட 7 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

நேற்று காலை ராயபுரம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த எம்.கே.பி.நகரை சேர்ந்த பார்த்திபன் (29) சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இரவு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வியாசர்பாடி பி.வி.காலனியை சேர்ந்த மணிகண்டன் இறந்து போனார். இதனால் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக இருந்தது.

இந்த நிலையில் இன்று காலை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற கொடுங்கையூர் கண்ணதாசன் நகரை சேர்ந்த நரேஷ் (30) பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

தீ விபத்தில் காயம் அடைந்தவர்களில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 10 பேருக்கும், ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் 10 பேருக்கும் இன்னும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் சிலரது நிலைமை மோசமாகவே இருக்கிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com