கத்துவா குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஊர்வலம் சென்ற பாஜக எம்.எல்.ஏ.வுக்கு மந்திரி பதவி

கத்துவாவில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஊர்வலம் சென்ற எம்.எல்.ஏ.வுக்கு மந்திரி பதவி அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #Kathua
கத்துவா குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஊர்வலம் சென்ற பாஜக எம்.எல்.ஏ.வுக்கு மந்திரி பதவி
Published on

ஜம்மு:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான தடயங்களை மறைத்தும், அழித்தும் திசை திருப்பியதாக மூன்று போலீசார், ஒரு சிறுவன் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தொடக்க விசாரணைக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், குற்றவாளிகளுக்கு ஆதரவாக பிப்ரவரி மாதம் இந்து ஏக்தா மஞ்ச் என்ற அமைப்பு ஊர்வலம் நடத்தியது. இதில், கத்துவா எம்.எல்.ஏ ராஜிவ் ஜஸ்ரோடியா கலந்து கொண்டார்.

பின்னர், கடந்த மாதம் இதே போல குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஊர்வலம் ஒன்று நடந்தது. இதில், பா.ஜ.க அமைச்சர்கள் இருவர் கலந்து கொண்டனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, அந்த இரு அமைச்சர்களும் பதவி விலகினர்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் நிர்மல் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதிய துணை முதல்வராக கவிந்தர் குப்தா இன்று பொறுப்பேற்றார். அவருடன் ராஜிவ் ஜஸ்ரோடியா புதிய மந்திரியாக பொறுப்பேற்றார்.

இதற்கு அம்மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “கத்துவா குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஊர்வலம் சென்ற இரு மந்திரிகள் பதவி நீக்கப்பட்டனர். அதே போல ஊர்வலம் சென்ற எம்.எல்.ஏ தற்போது மந்திரியாக பொறுப்பேற்றுள்ளார். இதன் மூலம் பாஜக மற்றும் முதல்வர் மெகபூபா முப்தி சொல்வது என்ன?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையே, குற்றவாளிகளுக்கு ஆதரவாக இந்து ஏக்தா மஞ்ச் நடத்திய ஊர்வலத்தில் நான் பங்கேற்க வில்லை என ராஜிவ் ஜஸ்ரோடியா மறுப்பு தெரிவித்துள்ளார். #Kathua

X

Maalai Malar
www.maalaimalar.com