

புதுச்சேரி:
முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சில துரோகிகளால் நமது கழகம் வெற்றி வாய்ப்பை இழந்தது. அம்மாவின் உண்மையான விசுவாசிகள் இடையே ஒருவித மனச்சோர்வை ஏற்படுத்தியது.
தமிழக முதல்வர் மற்றும் கழக ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் நேற்றைய தினம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு உண்மையான கழக தொண்டர்களிடையே புது விதமான உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கழகத்துக்கும், அம்மாவுக்கும் துரோகம் இழைக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை கழக அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இது புதுவை மாநிலத்துக்கும், பொருந்தும்.
ஏனெனில் புதுவை மாநில கழகத்தை சேர்ந்த சிலர் துரோகி தினகரனோடு நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்பில் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம்.
தினசரி நாளிதழ்களில் சுட்டிக் காட்டும் அளவுக்கு அவல நிலையோடு நமது கழகத்துக்கு பெரும் துரோகம் இழைக்கும் விதமாக புதுவை மாநிலத்தில் தினகரனின் சிலீப்பர் செல்களாக செயல்பட்டு கழகத்துக்கு துரோகம் விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, புதுவை மாநில கழகத்தை சேர்ந்த தொண்டர்கள், கழக நிர்வாகிகள், அம்மாவால் மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என யாரும் தினகரனுடனோ, அவரை சார்ந்தவர்களுடனோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ, தொலைபேசியிலோ தொடர்பு கொள்வதை நிறுத்தி கொண்டு தமிழக முதல்வர் மற்றும் கழக ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் தலைமையை ஏற்று கழகத்துக்கும், அம்மாவுக்கும் விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும்.
இல்லையென்றால் புதுவை மாநிலத்திலும் தினகரனின் சிலீப்பர் செல்களாக செயல்படுபவர்கள் மீது தமிழக முதல்வர் மற்றும் கழக ஒருங்கிணைப்பாளர் அனுமதியுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.