

விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூரை சேர்ந்தவர் தொப்பையன் (வயது 55). இவர் கடந்த 30.8.16 அன்று மரணமடைந்தார்.
இதையடுத்து அவரது மனைவி குப்பம்மாள், தனது கணவர் இறந்ததற்கான ஈமச்சடங்கு நிதி உதவி கேட்டு மகள் சுதா மற்றும் அவரது கணவர் திருப்பழனி ஆகியோருடன் சென்று திருநாவலூர் கிராம நிர்வாக அலுவலகம், உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் விண்ணப்பித்தார்.
பல மாதங்களாக அலைந்தும் அவர்களுக்கு நிதிஉதவி கிடைக்கவில்லை. மேலும் அதிகாரிகள் அவர்களுக்கு ஈமச்சடங்கு நிதி வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்றனர்.
இதனால் வேதனையடைந்த சுதா, கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனுக்கு மணியார்டர் மூலம் ரூ.2 ஆயிரம் அனுப்பி இருந்தார்.
அதில் தன்னிடம் லஞ்சம் கேட்ட அதிகாரிகளுக்கு இந்த பணத்தை பகிர்ந்து கொடுங்கள் என்று கூறியிருந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கலெக்டர் சுப்பிரமணியன் தீவிர நடவடிக்கை மேற்கொண்டார்.
கடந்த 27-ந் தேதி உளுந்தூர்பேட்டை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் உள்ளிட்ட 8 பேரிடம் கலெக்டர் விசாரணை நடத்தினார். மேலும் சுதாவின் தாய் குப்பம்மாள், கணவர் திருபழனி ஆகியோரிடமும் விசாரணை நடத்தினார். உடல் நலம் சரியில்லாததால் சுதா அன்று விசாரணைக்கு வரவில்லை. இதையடுத்து சுதாவை விசாரணைக்கு வரும்படி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று மாலை 4 மணிக்கு கலெக்டர் அலுவலகத்துக்கு சுதா வந்தார். அவருடன் தாயார் குப்பம்மாள், கணவர் திருபழனி ஆகியோரும் வந்தனர்.
சுதாவிடம் துணை கலெக்டர் வித்யா விசாரணை நடத்தினார். 1 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது. அப்போது சுதா தன்னிடம் லஞ்சம் கேட்ட கிராம உதவியாளர் மற்றும் அலுவலர்களின் பெயர்களை கூறினார். மேலும் இது தொடர்பாக விளக்கமாக புகார் மனு ஒன்றையும் துணை கலெக்டரிடம் கொடுத்தார்.
இந்த பிரச்சினையில் லஞ்சம் கேட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.