ஒட்டன்சத்திரம் அருகே தனியார் தோட்டத்தில் விவசாயி மர்ம மரணம்

ஒட்டன்சத்திரம் அருகே தனியார் தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த விவசாயி உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் அருகே தனியார் தோட்டத்தில் விவசாயி மர்ம மரணம்
Published on

சத்திரப்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டி கோபாலபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 70). விவசாய கூலித் தொழிலாளி. கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்றார். அதன் பிறகு வீடு திரும்ப வில்லை.

பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது மகன் ராமமூர்த்தி (வயது 50) சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணசாமியை தேடி வந்தனர்.

16 புதூர் அருகே உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் முதியவர் பிணம் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் கிராம நிர்வாக அலுவலர் அன்பரசி சத்திரப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியதில் இறந்தது கிருஷ்ணசாமி என தெரிய வந்தது. 10 நாட்களுக்கு முன்பே அவர் இறந்திருந்ததால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. ஆனால் எவ்வாறு இறந்தார்? என தெரிய வில்லை.

இதனையடுத்து சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சத்திரப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தெய்வ வள்ளி இது குறித்து வழக்கு பதிவு செய்து அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தவறி விழுந்து இறந்தார? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com