

சென்னை:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த நவம்பர் 29-ந் தேதி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவான ஒக்கி புயல், மறுநாள் கன்னியாகுமரி கடல் பகுதியில் கடும் புயலாக உருவெடுத்து, குஜராத் கடல் பகுதிவரை பயணம் செய்து, டிசம்பர் 6-ந் தேதி வலுவிழந்தது. இந்த புயல் சுமார் 2 ஆயிரத்து 400 கி.மீ. தூரம் பயணம் செய்துள்ளது. கடந்த 40 ஆண்டுகளில், ஒரு புயல் 2 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு மேல் பயணம் செய்வது, இதுவே முதல்முறை என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
இதற்கு முன்பு, 1966, 1977, 1978 ஆகிய ஆண்டுகளில் வங்கக்கடலில் உருவான புயல்கள் தலா 3 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்துள்ளன. 1922-ம் ஆண்டு உருவான ஒரு புயல், ஏமன் கடல் பகுதிவரை, 4 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்துள்ளது. ஆனால், இந்த புயல்கள் கன்னியாகுமரிக்கு இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியது இல்லை. குமரி, நெல்லை மாவட்டங்களுக்கு அதிக மழையை கொடுத்தவகையிலும் இந்த புயல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
புயல் வருவதை ஒரு மாதத்துக்கு முன்பே எச்சரிக்க வேண்டும் என்று மீனவர்கள் கோருகிறார்கள். அவ்வளவு முன்கூட்டியே கணிக்கும் அளவுக்கு வானிலை அறிவியல் முன்னேற்றம் அடையவில்லை. அத்துடன், கடல்சார்ந்த சவால்களும் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.