

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் 30-ந்தேதி ஒக்கி புயல் தாக்கியது. புயலால் கடலுக்கு சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் மாயமானார்கள். ஏராளமான பயிர் நிலங்களும் நாசமானது. விவசாயிகளும் உயிரிழந்தனர்.
புயல் பாதிப்புகளை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மத்திய மந்திரிகள் நிர்மலா சீத்தாராமன், பொன். ராதாகிருஷ்ணன், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி நாளை (19-ந்தேதி) குமரி மாவட்டம் வருகிறார். இதற்காக அவர், டெல்லியில் இருந்து இன்று மாலை தனி விமானம் மூலம் மங்களூர் வருகிறார்.
நாளை காலையில் மங்களூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் லட்சத்தீவு செல்கிறார். அங்கு அகாதி, கவராத்தி பகுதிகளுக்கு சென்று புயல் பாதிப்புகளை பார்வையிடுகிறார். பின்பு அங்கிருந்து திருவனந்தபுரம் செல்கிறார். பிற்பகல் 2 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி புறப்படுகிறார். 2.45 மணிக்கு அவர், கன்னியாகுமரி வந்து சேருகிறார்.
பிரதமர் மோடி வருவதை யொட்டி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை காலையிலேயே கன்னியாகுமரி வந்து விடுகிறார். இதுபோல முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரும் கன்னியாகுமரிக்கு மீண்டும் வருகிறார்கள்.
அவர்களுடன் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். இதில் அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொள்கிறார்கள். ஒக்கி புயலால் ஏற்பட்ட பாதிப்பு, மேற்கொள்ளப்பட்ட நிவாரண பணிகள் ஆகியவை குறித்து அவர்கள் விவாதிக்கிறார்கள்.
அதன் பிறகு அரசு விருந்தினர் மாளிகையின் கருத்தரங்கு கூடத்தில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள், விவசாயிகளை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். மேலும் புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறுகிறார்.
இந்நிகழ்ச்சிகள் முடிந்ததும் அவர், மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.
பிரதமர் வருகையை யொட்டி கன்னியாகுமரியில் நேற்று முதல் ஹெலிகாப்டர் தரை இறங்கும் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டனர்.
பிரதமர் வருகையையொட்டி கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் ஒத்திகை நடந்தபோது எடுத்த படம்.
மேலும் விவசாயிகள், மீனவர்களை திறந்த வெளி அரங்கில் பிரதமர் சந்தித்து பேசவே முதலில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் கன்னியாகுமரியில் தொடர்ந்து வீசி வரும் சூறைக்காற்றால் இந்த நிகழ்ச்சியை விருந்தினர் மாளிகை கருத்தரங்கு கூடத்திற்கு பாதுகாப்பு அதிகாரிகள் மாற்றினர்.
பிரதமர் வருகையை யொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் உள்ள அனைத்து லாட்ஜுகளிலும் இன்றும், நாளையும் பயணிகள் தங்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் லாட்ஜுகளில் தங்கி இருப்போர் பற்றியும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். தங்க நாற்கர சாலை, கடற்கரை பகுதிகள் அனைத்தும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது.