பெரியார் பற்றி விமர்சனம் - ரஜினிகாந்துக்கு ஓபிஎஸ் கண்டனம்
கடந்த 14-ந்தேதி சென்னையில் நடந்த துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் பெரியார் பற்றி ரஜினி பேசிய பேச்சுகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.
1971-ம் ஆண்டு சேலத்தில் பெரியார் தலைமையில் நடைபெற்ற ஊர்வலத்தில் இந்து கடவுள்களான ராமர், சீதை படங்கள் ஆடையின்றி எடுத்து வரப்பட்டதாகவும் அது துக்ளக் பத்திரிகையில் வெளியானதாகவும் ரஜினி பேசி இருந்தார்.
ரஜினியின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அ.தி.மு.க., தி.மு.க. தலைவர்கள் கூறுகையில், “ரஜினி யோசித்து பேசி இருக்க வேண்டும்” என்றனர். திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் ரஜினிக்கு எதிராக பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.
இதற்கிடையே போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்தனர். நேற்று முற்றுகை போராட்டம் நடத்த வந்த அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து ரஜினி தன் வீடு முன்பு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பெரியார் பற்றிய தனது கருத்துக்கு விளக்கம் அளித்தார்.
அவர் கூறுகையில் “பத்திரிகைகளில் வெளியான செய்திகளை வைத்தே நான் பேசினேன். கற்பனையாக எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. எனவே யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது” என்று அதிரடியாக தனது நிலையை வெளிப்படுத்தினார்.
1971-ம் ஆண்டு நடந்த சம்பவம் மறுக்கக்கூடியது அல்ல. மறக்கப்பட வேண்டிய சம்பவம் என்ற ரஜினியின் இந்த கருத்து தமிழக அரசியல் களத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரஜினிக்கு பல்வேறு கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோரும் ரஜினி கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதளங்களிலும் ரஜினி கருத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. அதே நேரத்தில் ஆதரவாகவும் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ரஜினியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியார், கீழ்தட்டு ஏழை-எளிய மக்களுக்காகவும் உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்காகவும் பாடுபட்டார். பகுத்தறிவு பகலவனாக விளங்கினார்.
என்னைப் போன்ற சாதாரண மனிதர்கள் கூட மிக உயர்ந்த, உன்னத நிலைக்கு வருவதற்கு அடித்தளம் இட்டவர் தந்தை பெரியார்.
அவர் அந்த செயலில் ஈடுபடும்போது பல்வேறு விமர்சனங்கள் வந்தது. அந்த விமர்சனங்கள் எல்லாம் பொய்யாக உண்மைக்கு மாறாக போய் விட்டன. தந்தை பெரியார் சொன்ன கருத்துக்கள்தான் இன்று கோபுரத்தின் உச்சியில் நீடித்து நிலை கொண்டுள்ளது.
அதை யாராலும் எந்த நேரத்திலும் குறை சொல்ல முடியாது.
குறை சொல்பவர்கள் மீண்டும் பெரியாருடைய ஆரம்ப கால கட்டத்தில் இருந்து அவர் இந்த சமுதாயத்தை முன்னேற்றுவதற்கு எடுத்துக் கொண்ட முன் முயற்சிகளை எல்லாம் தீவிரமாக நன்றாக படித்து ஆராய்ந்து கருத்து சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

