டெல்லியில் ஓபிஎஸ் முகாம்- சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி

பிரதமர் மோடியின் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை திரும்பாமல் மகன் ரவீந்திரநாத் குமாருடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
டெல்லியில் ஓபிஎஸ் முகாம்- சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி
Published on

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து 38 இடங்களில் போட்டியிட்டது. இதில் அ.தி.மு.க. சார்பில் தேனியில் போட்டியிட்ட ரவீந்திரநாத்குமார் மட்டுமே வெற்றி பெற்றார்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான இவருக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர்.

இதற்காக ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடியையும், பா.ஜனதா தலைவர் அமித்ஷாவையும் ஏற்கனவே சந்தித்து பேசி இருந்தார். பா.ஜனதா மேலிடமும் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கு மந்திரி சபையில் ஒரு இடம் கொடுக்க முன் வந்தது

ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேல்சபை எம்.பி.யான வைத்திலிங்கத்துக்கு மத்திய மந்திரி பதவி வழங்கும்படி சிபாரிசு செய்திருந்தார். இதனால் யாருக்கு மந்திரி பதவி வழங்குவது என்பதில் முடிவெடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

2 பேருக்கு மத்திய மந்திரி பதவி வழங்க முடியாது. கூட்டணி கட்சிகளுக்கு 1 இடம்தான் உண்டு என்று பிரதமர் மோடி முடிவு எடுத்திருந்ததால் அதி.மு.க. எம்.பி.க்களில் யாருக்கும் மந்திரி பதவி கிடைக்கவில்லை.

இதனால் டெல்லியில் முகாமிட்டிருந்த ஓ.பன்னீர் செல்வத்தின் மகனுக்கும், வைத்திலிங்கத்துக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.

ஆனால் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை திரும்பாமல் மகன் ரவீந்திரநாத் குமாருடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com