ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு நோட்டீஸ்: விசாரணை தாமதம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் விளக்கம் அளித்த பின்பு விசாரணை தொடங்கும் என ஆறுமுகசாமி கூறினார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு நோட்டீஸ்: விசாரணை தாமதம்
Published on

தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணம் அடைந்தார்.

செப்டம்பர் மாதம் 22-ந் தேதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு மரணம் அடைந்தார்.

ஜெயலலிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதிலும், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதிலும் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அ.தி.மு.க. தலைவர்கள் சிலரும் இந்த சந்தேகத்தை எழுப்பினார்கள்.

இதையடுத்து ஜெயலலிதா மரணத்தில் புதைந்துள்ள மர்மங்களை கண்டுபிடிக்க உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்த கோரிக்கையை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொண்டு விசாரணை ஆணையத்தை அமைத்தார்.

சென்னை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியை தலைவராகக் கொண்டு ஒரு நபர் விசாரணை கமி‌ஷனாக அந்த விசாரணை ஆணையம் செயல்படும் என்று கடந்த மாதம் 25-ந்தேதி தமிழக அரசு அறிவித்தது. அவர் சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்து செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அந்த அலுவலகத்துக்கு வந்த நீதிபதி ஆறுமுகசாமி பணிகளைத் தொடங்கினார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக தகவல்கள் தெரிந்தவர்கள் நவம்பர் 22-ந்தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


இந்த நிலையில் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ்கார்டன் வீட்டில் இன்று (திங்கட்கிழமை) நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையைத் தொடங்குவதாக இருந்தது. செப்டம்பர் மாதம் 22-ந் தேதி ஜெயலலிதா எப்போது, எப்படி சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் என்று நீதிபதி ஆறுமுகசாமி முதல் கட்டமாக தகவல்கள் சேகரிப்பார் என்று கூறப்பட்டது.

ஆனால் நீதிபதி ஆறுமுகசாமி கோவையில் உள்ள உறவினர் ஒருவர் மரணம் அடைந்து விட்டதால் இன்று அங்கு சென்று விட்டார். இதனால் அவர் இன்று போயஸ்கார்டனில் விசாரணையை தொடங்கவில்லை.

இதற்கிடையே ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு நோட்டீசு அனுப்ப விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக தகவல்களை விளக்கமாக சொல்ல அந்த 15 பேருக்கும் ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேரில் ஆஜராகியும் இந்த விளக்கத்தை அளிக்கலாம் அல்லது தபால் மூலமாகவும் விளக்கம் அளிக்கலாம் என்று கூறப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த 15 பேரும் உரிய விளக்கம் அளித்த பிறகே விசாரணை தொடங்கும் என்று தெரிகிறது.

கோவை சென்றுள்ள நீதிபதி ஆறுமுகசாமி வரும் புதன்கிழமைக்கு பிறகே சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது. இதனால் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே ஜெயலலிதா மரணம் குறித்து 20 பேர் தபால் மூலம் விசாரணை ஆணையத்துக்கு தகவல் அனுப்பி உள்ளனர். இந்த தகவலை நீதிபதி ஆறுமுகசாமியின் செயலாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த கடிதங்களும் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டமாக அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்துவார் என்று தெரிகிறது.

விசாரணை தகவல்களை தொகுத்து அவர் அறிக்கையாக தயாரித்து தமிழக அரசிடம் ஒப்படைப்பார். 3 மாதத்துக்குள் இந்த விசாரணை முடியும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com