

சென்னை:
தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் அறிவுறுத்தப்பட்ட கருத்துகள் வருமாறு:-
* வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே அனைத்து துறை அலுவலர்களும் ஆயத்தப் பணிகளை முழுமூச்சுடன் செயல்படுத்திட வேண்டும்.
* கடலோர பேரிடர் அபாய குறைப்பு திட்டத்தின் கீழ் கடலோர மாவட்டங்களில் பொதுப்பணித்துறையின் மூலம் ரூ.345 கோடி செலவில் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் கட்டப்பட்டு, இதில் 115 மையங்களில் பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் மக்களை தங்கவைக்க தயார்நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எஞ்சியுள்ள 6 மையங்களை விரைவில் கட்டிமுடித்து தயார் நிலையில் வைக்க வேண்டும்.
* பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பகுதிகள் என கண்டறியப்பட்ட பகுதிகளில் பேரிடர் தடுப்பு மற்றும் தணிப்பு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். இப்பணிகளை நீண்டகால பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து மேற்கொள்ள வேண்டும்.
* தேசிய மீட்புப்படை போல் இந்த ஆண்டு முதல் தமிழ்நாட்டிலும் புதிதாக 1,000 பேரைக் கொண்டு தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படை ஒன்று உருவாக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. பருவமழை தொடங்கும் முன்பே, இப்படையை விரைவில் உருவாக்கிட உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
* கடலோர மாவட்டங்கள் மற்றும் மலை பகுதிகளில் உள்ள வருவாய் கோட்ட அலுவலகங்களில் ரூ.28 லட்சம் செலவில் நவீன தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாட்டுடன் அவசர கட்டுப்பாட்டு அறைகள் உருவாக்க வேண்டும்.
* மாநில அவசர கட்டுப்பாட்டு மையம், அனைத்து மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையங்களுடன் காணொலி காட்சி மூலம் இணைக்கப்படும். இவ்வசதிகள் விரைவில் நிறுவப்பட வேண்டும்.
* மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக அதிநவீன நீர் உறிஞ்சி மற்றும் நீர் மறுசுழற்சி கருவி, நடமாடும் ஜெனரேட்டருடன் கூடிய உயர்கோபுர விளக்கு, அதி நவீன உறிஞ்சிகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.52.40 கோடி மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் இந்த ஆண்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
* இதுவரை தமிழ்நாடு முழுவதும் 33,212 பல்வேறு வகையான நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு 5 கோடியே 51 லட்சத்து 8167 கன மீட்டர் அளவிலான வண்டல் மண் அள்ளப்பட்டு 6 லட்சம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் கூடுதலாக சுமார் 1.6 டி.எம்.சி தண்ணீர் தேக்கிவைக்கலாம்.
* சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்குவதை தவிர்க்க 1,137 கி.மீ. மழைநீர் வடிகால்கள் ரூ.10.60 கோடி செலவில் பெருநகர சென்னை மாநகராட்சியால் தூர்வாரப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்கள் கட்டும் திட்டத்தின் கீழ் 294 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால்கள் கட்டிமுடிக்கப்பட்டு அவைகளிலிருந்து இணைப்பு கால்வாய்களில் முறையாக இணைக்கப்பட்டு மழைநீர் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், 376 கி.மீ நீளத்திற்கு சென்னை மாநகரில் மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்.
* ‘பேரிடர் அபாய குறைப்பு தினம்’ உலகம் முழுவதும் அக்டோபர் 13-ந் தேதி கடைபிடிப்பதையொட்டி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பேரிடர் மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பேரிடர் ஒத்திகை போன்றவை நடத்தப்பட வேண்டும்.
வடகிழக்கு பருவமழை பணிகளை கண்காணிப்பதற்காக மாவட்ட அளவில் கண்காணிப்பு அலுவலர்கள் (ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்) நியமிக்கப்பட்டுள்ளனர். காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு பி.அமுதா, திருவள்ளூர் மாவட்டத்துக்கு எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்படுகிறார்கள்.
* மேற்காணும் கண்காணிப்பு அலுவலர்கள் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும்போது, மாவட்டங்களில் டெங்கு தடுப்பு பணிகளையும் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.