

புதுச்சேரி:
புதுச்சேரியில் பாரதிய ஜனதா நிர்வாகிகள் சாமிநாதன், செல்வ கணபதி மற்றும் சங்கர் ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பரிந்துரை செய்தார். இதனை ஏற்று மத்திய உள்துறை அவர்களை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்தது. இந்த, நியமனம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும் என்று தீர்ப்பு வழங்கினர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், அவரது மனுவை இன்று பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றம், நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றும், அடுத்த வாரம் வழக்கை விசாரணைக்கு ஏற்பது பற்றி பரிசீலிப்பதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.