

ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி பாராளுமன்றத்தில் தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். பா.ஜ.க. உடனான கூட்டணியை முறித்துக்கொண்ட தெலுங்கு தேசம் கட்சி, மத்திய அரசில் அங்கம் வகித்த 2 மந்திரிகளை ராஜினாமா செய்ய வைத்தது.
அத்துடன், மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர இரு கட்சிகளையும் சேர்ந்த எம்.பி.க்கள் நோட்டீஸ்கள் அளித்துள்ளனர். ஆனால், பாராளுமன்றத்தில் தொடர்ந்து அமளி நடப்பதை காரணம் காட்டி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாது என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறி வருகிறார்.
ஆனால், பாராளுமன்றத்தில் அமளி நீடிக்கும்போது வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என விதி எதுவும் இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதுபற்றி அக்கட்சியின் மாநிலங்களவை கட்சி தலைவர் டெரிக் ஓ பிரையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்றம் ஒழுங்காக நடந்தாலும் நடக்காவிட்டாலும், நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டியது சபாநாயகரின் கடமை. அவை ஒழுங்காக நடைபெறாவிட்டால் தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என விதி எதுவும் இல்லை.
அவையை ஒழுங்காக நடத்த வேண்டியது பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி அனந்த் குமாரின் பொறுப்பு. அவரால் அவையை சரியாக நடத்த முடியவில்லை. அமைதியாக கூட்டத்தை நடத்துவது தொடர்பாக அவரிடம் இருந்தோ, ஆளுங்கட்சியிடம் இருந்தோ எங்களுக்கு ஒரு போன் கால் கூட வரவில்லை. எதிர்க்கட்சிகளை தொடர்புகொள்வதற்கு தீவிரமாக எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.