

புதுடெல்லி:
தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக ஆலோசனை நடத்திய சட்டக்கமிஷன் கடந்த 2015-ம் ஆண்டு தாக்கல் செய்த அறிக்கையில், அனைத்து தேர்தல் ஆணையர்களையும் தேர்வு செய்ய கொலீஜியம் அல்லது தேர்வுக்குழுவை அமைக்க வேண்டும் என பரிந்துரைத்து இருந்தது.
3 உறுப்பினர்களை கொண்ட இந்த கொலீஜியத்தில் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் அல்லது பாராளுமன்றத்தின் மிகப்பெரிய எதிர்க்கட்சியின் தலைவர், தலைமை நீதிபதி ஆகியோர் இருக்க வேண்டும் என கூறியிருந்தது. இந்த கொலீஜியம் முறைக்கு முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைத்தியும் ஆதரவு தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் கொலீஜியம் முறை அமல்படுத்தும் திட்டம் எதுவும் உள்ளதா? என பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய சட்டத்துறை இணை மந்திரி பி.பி.சவுத்ரி நேற்று எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில் தேர்தல் கமிஷனர்களை தேர்வு செய்ய கொலீஜியம் அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை என அவர் கூறியிருந்தார்.
மேலும் தேர்தல் கமிஷனர்களை தேர்வு செய்வது தொடர்பான வரைவு சட்டத்தை உருவாக்க அனைத்துக்கட்சியினரின் ஆலோசனையை மத்திய அரசு பெறுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த மந்திரி, அப்படி ஒரு வரைவு சட்டம் உருவாக்குவது தொடர்பான பரிந்துரை எதுவும் தற்போதுவரை மத்திய அரசிடம் இல்லை எனவும் கூறினார்.