பீகாரில் பா.ஜ.க. ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்றார் நிதிஷ் குமார்: துணை முதல்வர் சுஷில் மோடி

பீகாரில் ஆளும் மெகா கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் காரணமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், பா.ஜ.க. ஆதரவுடன் மீண்டும் முதல்-மந்திரியாக இன்று பொறுப்பேற்றுள்ளார்.
பீகாரில் பா.ஜ.க. ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பதவியேற்றார் நிதிஷ் குமார்: துணை முதல்வர் சுஷில் மோடி
Published on

பீகாரில் ஆட்சி அமைத்திருந்த மெகா கூட்டணியில் பூசல் வலுத்ததையடுத்து, முதல்வர் நிதிஷ்குமார் நேற்று அதிரடியாக தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தையும் உடனடியாக கொடுத்தார். ஆளுநரும் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டார்.

பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமாருக்கு மோடி தனது டுவிட்டரில் வரவேற்பு தெரிவித்தார். பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நிதிஷ்குமாரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பாட்னா நகரில் நடைபெற்ற பா.ஜ.க. ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் நிதிஷ்குமாருக்கு ஆதரவாக பா.ஜ.க. சார்பில் ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் நிதிஷ் குமார். ஆட்சியமைக்க போதுமான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தையும் அவர் அளித்தார்.

இதுஒருபுறம் நடக்க, ஆளுநரை சந்திக்க ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் லாலுவின் மகன் தேஜஸ்வி நேரம் கேட்டிருந்தார். இன்று காலை 11 மணிக்கு சந்திக்க உள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

ஆனால், பா.ஜ.க. ஆதரவுடன் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க நிதிஷ்குமாருக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்கள் சிலருடன் தேஜஸ்வி ஆளுநர் மாளிகையை நோக்கி சென்றார். பின்னர், தேஜஸ்வி உள்ளிட்ட 6 எம்.எல்.ஏ.க்களை மட்டும் பார்க்க ஆளுநர் அழைத்தார்.

ஆளுநரிடம் சட்டசபையில் பெரிய கட்சியான தாங்களும் ஆட்சி அமைக்க உரிமை கோருவதாக ஆளுநரிடம் தேஜஸ்வி வலியுறுத்தினார். இருப்பினும், ஆளுநர் எதுவும் பிடிகொடுக்கவில்லை.

இந்நிலையில், பீகார் மாநில முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்பது உறுதி ஆனது. இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வராக நிதிஷ் குமாரும், துணை முதல்வராக சுஷில் மோடியும் பதவியேற்றனர். அவர்களுக்கு ஆளுநர் கேசரிநாத் திரிபாதி பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். நிதிஷ் குமார் முதல்வராக பொறுப்பேற்பது இது ஆறாவது முறையாகும்.

பதவியேற்பு நிகழ்ச்சியின்போது ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினரால் பிரச்சனை எதுவும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஆளுநர் மாளிகையை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து ஆளுநர் மாளிகை நோக்கி ஆர்ப்பாட்ட பேரணி நடத்தும் திட்டத்தை ராஷ்டிரிய ஜனதா தளம் ரத்து செய்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com