என்ன நடக்கிறது நிர்பயா வழக்கில்? - மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடிய குற்றவாளி பவன் குமார்

நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா, உச்ச நீதிமன்ற உத்தரவை மறு பரிசீலனை செய்யக்கோரி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
நிர்பயா வழக்கின் குற்றவாளிகள்
நிர்பயா வழக்கின் குற்றவாளிகள்
Published on

புதுடெல்லி:

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, விஜய் குமார் சர்மா மற்றும் அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 4 குற்றவாளிகளுக்கும் பிப்ரவரி 1-ம் தேதி (நாளை) தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், குற்றவாளிகள் அடுத்தடுத்து புதிய மனுக்களை தாக்கல் செய்து தண்டனையை நிறைவேற்ற விடாமல் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

அவ்வகையில், சிறார் சட்டப்பிரிவுகளின் கீழ் தனக்கு தண்டனை வழங்க வேண்டும் என கூறி வரும் குற்றவாளி பவன் குமார் குப்தா உச்ச நீதிமன்றத்தில் இன்று புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். 

அதில், கடந்த 2012-ம் ஆண்டு போலீசார் தன்னை கைது செய்தபோது தான் சிறுவனாக இருந்ததாகவும், அதனால் தனக்கு சிறார் சட்டப்பிரிவின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். தனது மனுவை தள்ளுபடி செய்த முடிவை உச்ச நீதிமன்றம் மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார். 

இதே கோரிக்கையை முன்வைத்து பவன் குமார் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி குற்றவாளிகள் தரப்பில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிவைடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com