

வரும் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதை கருத்தில் கொண்டு, தான் எதிர்பார்த்த அளவு திறம்பட செயல்படாத மந்திரிகளை நீக்கிவிட்டு புதிய மந்திரிகளை நியமிப்பது குறித்தும், நிதி மந்திரி அருண்ஜெட்லி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப துறை மந்திரி ஹர்ஷ வர்தன், ஜவுளித்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி ஆகியோரிடம் இருக்கும் கூடுதல் இலாகாக்களை பகிர்ந்து அளிப்பது பற்றியும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வந்தார்.
இதைத்தொடர்ந்து, பிரதமர் மந்திரிசபையை மாற்றி அமைப்பதற்கு வசதியாக ராஜாங்க மந்திரிகளான ராஜீவ் பிரதாப் ரூடி (திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர்-தனி பொறுப்பு), சஞ்சீவ் குமார் பல்யான் (நீர்வளத்துறை), பக்கன் சிங் குலாஸ்டே (சுகாதாரம், குடும்ப நலம்), மகேந்திரநாத் பாண்டே (மனிதவள மேம்பாடு) ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
மேலும், ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு, நீர்வளத்துறை மந்திரி உமா பாரதி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை மந்திரி கல்ராஜ் மிஸ்ரா, உருக்கு துறை மந்திரி சவுத்ரி பிரேந்திர சிங், ராஜாங்க மந்திரி உபேந்திர குஷ்வாகா (மனிதவள மேம்பாடு) ஆகியோர் ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபையில் புதிய மந்திரிகள் பதவியேற்கும் விழா இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
தர்மேந்திர பிரதான், பியூஷ் கோயல், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். ஷிவ் பிரதாப் சுக்லா, அஷ்வினி குமார் சவுபே, விரேந்திர குமார், அனந்த் குமார் ஹெக்டே, ஆர்.கே.சிங், ஹர்தீப் சிங் புரி ஆகியோர் இணை மந்திரிகளாக பதவியேற்றனர்.
இணை மந்திரியாக இருந்த நிர்மலா சீதாராமான் கேபினட் அந்தஸ்துடன் கூடிய மந்திரியாக பதவி ஏற்றார். புதிய மந்திரிகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.