இலங்கை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளுடன் தொடர்பு - கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

இலங்கை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதையடுத்து கோவையில் 7 பேர் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இலங்கை குண்டுவெடிப்பு தீவிரவாதிகளுடன் தொடர்பு - கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
Published on

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ந்தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது கொழும்பில் உள்ள கொச்சிகடை அந்தோணியார் ஆலயம், நீர் கொழும்பில் உள்ள கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியில் உள்ள சீயோன் தேவாலயம் ஆகிய இடங்களில் பிரார்த்தனை நேரத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்தன.

அப்போது பிரார்த்தனையில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் ஏராளமான பேர் பலியானார்கள். இந்த குண்டுவெடித்த நேரத்தில் கொழும்பில் உள்ள 3 நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டுகள் வெடித்தது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 200-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்காததால் இந்த சம்பவம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் இலங்கை உளவு பிரிவின் விசாரணையில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்தது. இந்த நிலையில் இலங்கை குண்டு வெடிப்புக்கு காரணமான கும்பலுடன் சமூக வலைதளங்களில் கோவையை சேர்ந்த சிலர் தொடர்பில் இருப்பதாக சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து இந்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள் அந்த வாலிபர்களை கண்காணித்து வந்தனர்.

கோவை, கொச்சியில் இருந்து வந்த டி.எஸ்.பி. விக்ரம் தலைமையிலான என்.ஐ.ஏ. அதிகாரிகள் 7 குழுக்களாக பிரிந்து கோவையில் உள்ள 7 பேர் வீடுகளில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.

கோவை போத்தனூரை சேர்ந்த சதாம், அக்பர், அக்ரம்ஜிந்தா, உக்கடம் அன்பு நகரை சேர்ந்த அசாரூதின், குனியமுத்தூரை சேர்ந்த அபுபக்கர் சித்திக், உக்கடம் அல்அமின் காலனியை சேர்ந்த இதயத்துல்லா, ஷாகிம்ஷா ஆகியோர் வீடுகளில் இந்த சோதனை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com