

மழைக்காலங்களில், மழையின் தீவிரம் மற்றும் அந்தந்த பகுதிகளின் நிலவரத்திற்கு ஏற்ப பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. ஆனால் சில சமயம் பாதிப்பு இல்லாத பகுதிகளிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதால் பாடத்திட்டத்தை முடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே விடுமுறை விட வேண்டும், ஒட்டுமொத்த வருவாய் மாவட்டத்திற்கும் விடுமுறை அளிக்க வேண்டிய அவசியமில்லை. கோவில் திருவிழா உள்ளிட்ட இதர காரணங்களுக்காக விடுமுறை அறிவிக்கும்போது அதற்கு ஈடு செய்யும் பணி நாளையும் சேர்த்து அறிவிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
விடுமுறை விடப்பட்டால் அதை ஈடுசெய்ய சனிக்கிழமை வகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. விடுமுறை காரணமாக பாடத்திட்டம் எதுவும் பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மழை காரணமாக கல்வி மாவட்ட அளவில், ஊராட்சி அளவில் மட்டுமே விடுமுறை விடலாம்.
திருவிழா போன்றவற்றிற்கு உள்ளூர் விடுமுறை விடும்போது ஈடுசெய்யும் பணி நாளையும் சேர்த்து அறிவிக்க வேண்டும்.