நாளை வரை கன மழை நீடிக்கும் - அந்தமான் கடலில் 7-ந்தேதி புதிய காற்றழுத்தம் உருவாகிறது

டெமிரி புயல் வலுவிழந்து மலாய் தீபகற்பம் வழியாக அந்தமான் கடலில் இணைந்ததால் 7-ந்தேதி புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளது.
நாளை வரை கன மழை நீடிக்கும் - அந்தமான் கடலில் 7-ந்தேதி புதிய காற்றழுத்தம் உருவாகிறது
Published on

தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சியானது கடந்த 2-ந்தேதி அதே இடத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.

அன்றைய தினம் மாலையில் காற்றின் வேகம் அதிகரிப்பால் காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து வட தமிழகத்தின் கரைப்பகுதிக்கு வந்தது. இதனால் சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் 30 செ.மீ. அளவுக்கு மழை கொட்டியது.

காற்றழுத்த தாழ்வு பகுதியானது தொடர்ந்து வட தமிழக கடலோர பகுதிகளிலும், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளிலும் அதே இடத்தில் நீடிக்கிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும் புதுவையிலும் மழைபெய்து வருகிறது. உள் மாவட்டங்களிலும் தென் தமிழக கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

இன்றும் நாளையும் அடுத்த 24 மணிநேரத்துக்கு மழை நீடிக்கும் என்றும் 6-ந்தேதி மழை எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும் டெல்லி இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே தென்சீன கடலில் உருவாகி வியட்நாமில் கரையை கடந்த டெமிரி புயல் வலுவிழந்து மலாய் தீபகற்பம் வழியாக அந்தமான் கடலில் இணைந்தது. இதன் காரணமாக அந்தமான் கடல் பகுதியில் 7-ந்தேதி புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளது.

இதனால் 7-ந்தேதியும், 8-ந்தேதியும் அந்தமான் நிகோபர் தீவுகளில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com