ரூ.17.80 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கிண்டி தொழிற்பேட்டை புதிய கட்டிடங்கள்: எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

ரூ.17.80 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கிண்டி தொழிற்பேட்டை புதிய கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
ரூ.17.80 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கிண்டி தொழிற்பேட்டை புதிய கட்டிடங்கள்: எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
Published on

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் சார்பில் கரூர்-காதப்பாறை கிராமத்தில் 1 கோடியே 95 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சட்டமுறை எடையளவு ஆய்வகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த தொழிலாளர் அலுவலக வளாகத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

17 கோடியே 80 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னை, கிண்டி தொழிற்பேட்டை சிட்கோ வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்திற்கான ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டடம், தருமபுரி, நாமக்கல் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 3 ஒருங்கிணைந்த தொழிலாளர் அலுவலக வளாகங்கள், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரத்தில் கட்டப்பட்டுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகக் கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

கரூர்-காதப்பாறை கிராமத்தில் 1 கோடியே 95 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சட்டமுறை எடையளவு ஆய்வகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த தொழிலாளர் அலுவலக வளாகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

மேலும், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் அலுவலகம் மற்றும் அதன் 16 சார்நிலை அலுவலகங்களுக்கு சென்னை, கிண்டி தொழிற்பேட்டை சிட்கோ வளாகத்தில் 46,967 சதுரடி பரப்பளவில், 8 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்திற்கான ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டடம்;

தருமபுரி- விருப்பாட்சிபுரம் கிராமத்தில் 1 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், நாமக்கல்- சிலுவம்பட்டி கிராமத்தில் 1 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், நாகப்பட்டினம்-காடம்பாடி கிராமத்தில் 1 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள சட்டமுறை எடையளவு ஆய்வகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த தொழிலாளர் அலுவலக வளாகங்கள்;

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 1 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 1 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகக் கட்டடங்கள்;

என மொத்தம் 19 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை கட்டடங்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

மேலும், 32 மாவட்ட தொழிலாளர் நல அலுவலர்கள் (சமூக பாதுகாப்பு திட்டம்), அமைப்புசாரா நல வாரியங்களின் பணிகளான தொழிலாளர்களை பதிவு செய்து அடையாள அட்டைகள் வழங்குதல், பதிவினை புதுப்பித்தல், நல உதவி கோரும் கேட்பு மனுக்களை பெற்று நல உதவிகளை ஒப்பளித்து வழங்குதல் போன்ற களப் பணிகளை மேற்கொள்வதற்காக 2 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 32 ஜீப்புகளை மாவட்ட தொழிலாளர் நல அலுவலர்களின் பயன் பாட்டிற்காக வழங்கும் அடையாளமாக 7 மாவட்ட தொழிலாளர் நல அலுவலர்களுக்கு வாகனத்திற்கான சாவிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.

கணினியில் ஆங்கில மொழிக்கென பிழை திருத்தி, சொல் திருத்தி வசதிகள் இருப்பதைப்போல், தமிழில் ஒற்றுப்பிழை, சந்தி, மயங்கொலி உள்ளிட்ட இலக்கணப் பிழைகள் ஏது மின்றி எழுதத்தக்க வகையிலும், தவறுகளைத் தானே சுட்டிக்காட்டித் திருத்திக் கொள்ளும் வகையிலும் மற்றும் எழுத்துருக்களை மாற்றிக் கொள்ளும் வசதியுடன் “அம்மா மென் தமிழ்ச் சொல்லாளர்” தமிழ் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ் மென்பொருள் ஒன்றின் விலை 300 ரூபாய் ஆகும்.

இந்த தமிழ் மென் பொருளை அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விலையில்லாமல் வழங்கும் திட்டத்தின் முதற்கட்டமாக, 30 லட்சம் ரூபாய் செலவில் 10,000 தமிழ் மென்பொருள்கள் தமிழ் வளர்ச்சித் துறையால் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் வழங்கப்படவுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com