

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் இந்த மாதம் தொடக்கத்ததில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதிதாக இன்று மேலும் 102 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி மாநகராட்சி பகுதியில் 35 பேருக்கும், பாளை யூனியனில் 21 பேரும், வள்ளியூரில் 17 பேரும், ராதாபுரத்தில் 9 பேரும், அம்பை, மானூர், பாப்பாக்குடி, சேரன்மகாதேவியில் தலா 4 பேரும், நாங்குநேரி, களக்காட்டில் தலா 2 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தொற்று பாதித்தவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களது வீடுகளை சுற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் பெண் டாக்டர் ஒருவரும், கூடங்குளத்தில் 2 போலீசாரும் அடங்குவர். இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்து 11 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 7 ஆயிரத்து 464 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,385 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நெல்லையை சேர்ந்த தொழிலதிபரும், அ.தி.மு.க. பிரமுகருமானவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மேலும் 95 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 4 ஆக அதிகரித்து உள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 10 ஆயிரத்து 50 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 847 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 107 பேர் இறந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் புதிதாக இன்று காலை வரை 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்து 61 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3 ஆயிரத்து 939 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 956 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.