

சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டது. கோயம்பேடு-ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர் மட்ட பாதையிலும் திருமங்கலம்-நேருபூங்கா இடையே சுரங்க பாதையிலும் மெட்ரோ ரெயில் ஓடுகிறது
பயணிகள் வரவேற்பை தொடர்ந்து மெட்ரோ ரெயில் சேவை சென்னை மாநகரம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. நேருபூங்கா-சென்ட்ரல் வரையிலான 2½கி.மீட்டர் தூர சுரங்க ரெயில் நிலைய பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
இதில் நேருபூங்கா, எழும்பூர், சென்ட்ரல் ஆகிய 3 ரெயில் நிலையங்கள் அமைகின்றன. நேரு பூங்கா ரெயில் நிலையத்தி லிருந்து ஏற்கனவே மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படு கின்றன. எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலைய பணிகளும் முடிந்துவிட்டன. சைதாப்பேட்டை-டி.எம்.எஸ் வரையிலான 4 கி.மீட்டர் தூர சுரங்க ரெயில் நிலையப் பணிகளும் நிறைவடைந்துள்ளது.
அடுத்த வாரம் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் இந்த வழித்தட பாதைகளில் ஆய்வு பணிகளை மேற்கொள்கிறார். அவர் அனுமதி அளித்ததும் விரைவில் மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை தொடங்கப்பட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவத்தினர் முழுவீச்சில் செய்து வருகிறார்கள்.
நேருபூங்கா-சென்ட்ரல் வரையிலான மெட்ரோ ரெயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டதும் சென்ட்ரலில் இருந்து விமான நிலையத்துக்கு 22 கி.மீட்டர் தூரத்துக்கு இனிமேல் நேரடியாக செல்ல முடியும். மெட்ரோ ரெயிலில் பயணிகள் கூட்டமும் அதிகரிக்கும்.
தற்போது மெட்ரோ ரெயிலில் தினமும் 34 ஆயிரம் பேர் பயணம் செய்து வருகிறார்கள். இனிமேல் 1 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
நேருபூங்கா-சென்ட்ரல் வரையிலான மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அதேபோல சைதாப்பேட்டை- டி.எம்.எஸ் வரையிலான சேவைகளும் முடிவடைந்துள்ளன. இந்த வழித்தட பணிகளை ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் அடுத்த வாரம் ஆய்வு செய்கிறார். அவர் அனுமதி அளித்ததும் விரைவில் பயணிகள் போக்குவரத்து சேவை தொடங்கப்பட உள்ளது.
சென்ட்ரல்-விமான நிலையத்துக்கு நேரடி மெட்ரோ ரெயில் போக்குவரத்து நடைபெறும். மெட்ரோ பயணிகள் எண்ணிக்கை 34 ஆயிரத்தில் இருந்து 1 லட்சமாக உயரும்.