

புதுடெல்லி:
தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் சொல்வதை ஏற்று செயல்படுத்த மத்திய அரசு மறுக்கிறது என்று ப.சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார்.
மத்திய பட்ஜெட் தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் எம்.பி., டுவிட்டரில் நேற்று தொடர்ந்து பல பதிவுகளை வெளியிட்டு உள்ளார்.
அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:-
தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியனை நான் உறைவிட மருத்துவராக கருதுகிறேன். அவர் தனது நோயாளியை ஒவ்வொரு நாளும் பார்த்து, உடல்நிலையை பரிசோதித்து, உடல் நலம் சரி இல்லாதபோது சிகிச்சை அளித்து, மருந்துகள் வழங்க வேண்டும்.
ஆனால் ஒரு மோசமான நோயாளி, மருந்துகளை எடுத்துக்கொள்ள மாட்டார். தனது உடல்நிலையை தானே முடிவு செய்வார். அவரே மருந்துகளை முடிவு செய்து கொள்வார்.
அரவிந்த் சுப்பிரமணியனைப் பொறுத்தமட்டில், 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம், தான் நியமிக்கப்பட்ட காலம் முதல் அவர் நல்ல மருத்துவராக இருந்து வந்து உள்ளார். ஆனால் பாரதீய ஜனதா கூட்டணி அரசுதான் மோசமான நோயாளியாக உள்ளது.
பட்ஜெட் என்பது சீர்திருத்தங்களை எடுத்து வைப்பதற்கும், அதற்கான கால அட்டவணையை முடிவு செய்வதற்கும் உரிய சந்தர்ப்பம் ஆகும். ஆனால் அதற்கு பதிலாக நாம் பெற்றிருப்பது எலிசபெத் காலத்திய பாடம்தான். அதாவது, ஒரு மேம்பட்ட அணுகல் மற்றும் சேவை சிறப்புத்தன்மை திட்டத்தின்கீழ் ஒரு லட்சியமான சீர்திருத்த செயல்திட்டம் ஆகும்.
மேம்பட்ட சேவையில், அங்கீகாரம், தீர்மானம், மறுமூலதனம், சீர்திருத்தம் என்னும் நான்கு அம்சங்கள் அடங்கி உள்ளன. இதில் 3 அம்சங்களை மேற்கொண்டு இருந்தாலும், வங்கி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை.
சமீபத்திய மாதங்களில் ஏற்றுமதிகளில் ஏற்பட்டு உள்ள ஒரு லேசான முன்னேற்றம், மத்திய அரசை மன நிறைவு அடையச் செய்து இருக்கலாம். ஆனால் அதற்கான சூழல் இல்லை. ஏனென்றால், முந்தைய சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைக்கு வணிக ரீதியிலான ஏற்றுமதிகள் திரும்ப வரவில்லை.
1980-களில் இருந்ததைப் போல மத்திய அரசின் வரிகள்- உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதம் உயர்வானதாக இல்லை. ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் சரக்கு, சேவை வரிகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பு, எவ்வளவு வசூலாகி உள்ளது, அடுத்த ஆண்டு எப்படி இருக்கும் என்ற கணிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
சேமிப்புகள், முதலீடுகள் வகையில் கவலைப்படத்தக்க நிலைமை இருப்பதைக்கூட பட்ஜெட்டில் நிதி மந்திரி அருண் ஜெட்லி ஒப்புக்கொள்ளவில்லை.
மத்திய அரசைப் பொறுத்தமட்டில் தொடர்ந்து மறுக்கிற மனநிலையில்தான் உள்ளது. அது பொருளாதார புற நிலையை மறுக்கிறது. விவசாயிகளின் துயரத்தை மறுக்கிறது. வேலை இல்லா திண்டாட்டத்தை மறுக்கிறது. எதிர்க்கட்சிகளின் வாதங் களை ஏற்க மறுக்கிறது. இப்போது அது, 2014-ம் ஆண்டு அமர்த்திக்கொண்ட மருத்துவரின் (தலைமை பொருளாதார ஆலோசகர்) நோய் அறிதலையும், அதற்காக பரிந்துரை செய்த நிவாரணத்தையும் ஏற்க மறுக்கிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.