பனாமா ஊழல்: பாகிஸ்தான் பிரதமர் மகன் விசாரணை குழுவின் முன்னர் ஆஜர்

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் பதவியை தவறாக பயன்படுத்தி வெளிநாடுகளில் சொத்துகளை குவித்து வைத்திருப்பதாக ‘பனாமா லீக்ஸ்’ மூலம் தெரியவந்த நிலையில் இதுதொடர்பாக விசாரிக்கும் குழுவின் முன்னர் நவாஸ் ஷெரிப் மகன் இன்று ஆஜரானார்.
பனாமா ஊழல்: பாகிஸ்தான் பிரதமர் மகன் விசாரணை குழுவின் முன்னர் ஆஜர்
Published on

சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பின் 100 செய்தியாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக உலக நாடுகளின் பிரபல அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் முறைகேடான வழியில் பனாமா நாட்டு வங்கிகளிலும், தொழில் நிறுவனங்களிலும் பதுக்கிய சொத்து மற்றும் பணம் பற்றி ரகசியமாக தகவல்களை திரட்டி வந்தனர்.

இந்த தகவல்களை ஆதாரத்துடன் ஜெர்மனி நாளிதழ் ஒன்று ‘பனாமா ஆவணங்கள்’ என்ற பெயரில் வெளியிட்டு உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த 40 ஆண்டுகளில் பனாமா நாட்டில் 2 லட்சத்து 14 ஆயிரம் நிறுவனங்களில் பணத்தை பதுக்கிய உலக நாடுகளின் முக்கிய பிரமுகர்கள் இந்த மெகா பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். ‘மொசாக் ஃபொன்சேகா’ என்ற நிதி ஆலோசனை மற்றும் சட்ட நிறுவனத்தின் மூலமாக இவர்கள் பனாமாவில் குவித்த சொத்து மற்றும் பணம் பலஆயிரம் கோடி லட்சம் அமெரிக்க டாலர்களுக்கும் மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை உலகில் நடந்த மிகப்பெரிய முறைகேடு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

பனாமா நிறுவனத்தின் கைவசம் இருந்த இந்த ஆவணங்களில் சில பகுதிகளை ரகசியமாக, ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பினர் வெளியிட்டனர்.


பணம் பதுக்கியவர்களில் பலநாடுகளை சேர்ந்த முன்னாள், இந்நாள் பிரதமர்கள், ஹாலிவுட் நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள் என பலரும் அடங்குவர். பனாமா பேப்பர்ஸ் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு நாட்டு தலைவர்கள் தங்களது பதவியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் பெயரும் இடம் பெற்றிருந்தது.

நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகன்கள் இங்கிலாந்து உள்ளிட்ட இடங்களில் குவித்து வைத்துள்ள சொத்துகள் தொடர்பாக பனாமா லீக்ஸ் சில ரகசியங்களை பகிரங்கப்படுத்தியது. இந்த தகவல்கள் வெளியானதும் பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரிப் விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகள்  தொடர்பாக விசாரணை நடத்த 6 நீதிபதிகளை உள்ளடக்கிய சிறப்பு விசாரணை குழுவை நியமித்து பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் கடந்த ஏப்ரல் மாதம் 20-ம் தேதி உத்தரவிட்டது. கடந்த மே மாதம் ஐந்தாம் தேதி அமைக்கப்பட்ட இந்த விசாரணை குழு இதற்கு முன்னர் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகன்களிடம் விசாரணை நடத்தியது.

வெளிநாடுகளில் தங்களது குடும்பத்தாருக்கு இருக்கும் வர்த்தக தொடர்புகள் பற்றிய நீதிபதிகளின் கேள்விக்கு அவர்கள் பதில் அளித்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com