

புதுடெல்லி:
டெல்லியில் இருந்து ஜோத்பூர் வழியாக ஜெய்ப்பூருக்கு ஏர் இண்டியா விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 175 பயணிகள் இருந்தனர்.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது அதில் பயணம் செய்த கடற்படை அதிகாரி தாகள் வெடிகுண்டு எடுத்து வருவதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். இதனால் விமான பயணிகள் மற்றும் ஊழியர்கள் இடையே பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.
உடனே விமானி ஜோத்பூரில் விமானத்தை தரை இறக்கினார். விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். கடற்படை அதிகாரியிடம் சோதனையிட்ட போது அவரிடம் வெடிகுண்டு எதுவும் இல்லை.
அதை தொடர்ந்து மாலை 2 மணியில் இருந்து 6 மணிவரை விமானத்தில் சோதனை நடத்தினர். அப்போதும் வெடிகுண்டு சிக்கவில்லை. பின்னர் அவரிடம் விசாரணை நடத்திய போது தான் ஜோத்பூரில் இறங்க வேண்டியிருந்ததாகவும், அதற்கு டிக்கெட் கிடைக்காததால் வெடிகுண்டு புரளியை கிளப்பி விட்டதாகவும் கூறினார்.
அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டு மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையினரால் ஜோத்பூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அதையடுத்து மாலை 6.30 மணிக்கு விமானம் டெல்லி புறப்பட்டு சென்றது. இச்சம்பவம் காரணமாக விமானம் 4 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.