மேற்கு வங்கத்தின் பெயர் மாற்றம் - அமைச்சரவை ஒப்புதல்

டிசம்பர் 9 அன்று பெயர் மாற்றத் தீர்மானம் தாக்கல் செய்யப்படும்
Suvendu Adhikari
Published on: 

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை ஆங்கிலத்திலும் 'பச்சிம் பங்கா' (Paschim Banga) என மாற்றுவதற்கான தீர்மானம் வரும் டிசம்பர் 9, 2026 அன்று சட்டமன்றத்தில் கொண்டுவரப்படும் என முதலமைச்சர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார். இந்த முன்மொழிவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டிசம்பரில் பெயர் மாற்றம் செய்ய தீர்மானம்

மேற்கு வங்க சட்டமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 4 முதல் டிசம்பர் 14, 2026 வரை நடைபெறவுள்ளது. இதில் டிசம்பர் 9 அன்று பெயர் மாற்றத் தீர்மானம் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ஒப்புதல்

சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு, அது மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் நாடாளுமன்ற நடைமுறைகளுக்குப் பிறகு, அதிகாரப்பூர்வ ஆவணங்களில் ஆங்கிலத்திலும் 'பச்சிம் பங்கா' என்றே மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாக சிக்கலை குறைக்க திட்டம்

வங்க மொழியில் உச்சரிப்பதைப் போலவே ஆங்கிலத்திலும் பெயரை அமைப்பது மற்றும் 1947-ஆம் ஆண்டு மாநில உருவாக்கத்துடன் தொடர்புடைய வரலாற்றுப் பின்னணியைக் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 'West Bengal' என 'W' எழுத்தில் தொடங்குவதால் அகர வரிசைப்படி தேசிய அளவிலான கூட்டங்களில் கடைசியாகப் பேசும் வாய்ப்பு கிடைக்கும் நிர்வாகச் சிக்கலைக் குறைக்கவும் இது உதவும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது

முந்தைய பெயர் மாற்ற முயற்சிகள்

இதற்கு முன்பு இடது முன்னணி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக் காலங்களிலும் பெயர் மாற்ற முன்மொழிவுகள் (2011-இல் 'பச்சிம் பங்கா'/'பச்சிம் பங்கோ', 2018-இல் 'பங்களா') கொண்டுவரப்பட்ட போதிலும், மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்காமல் நிலுவையில் இருந்தன.

தற்போது மாநிலத்திலும் மத்தியிலும் ஒரே கட்சி ஆட்சியில் இருப்பதால் ஒப்புதல் பெறுவதில் சிக்கல்கள் குறையலாம் என அரசியல் நோக்கர்கள் மற்றும் நிபுணர்கள் கருதுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

X