

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி 150 ஆண்டு கால பழமையான பள்ளிக் கூடம் உள்ளது. இந்த பள்ளிக் கூடத்தில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆசிரியர் தினத்தன்று சிறப்பு மதிய உணவு வழங்கப்படும்.
அதன்படி நேற்று உணவு வழங்கப்பட்டுள்ளது. அப்போது போதுமான சாப்பாடு மற்றும் சிக்கன் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் மாணவர்கள் கோபம் அடைந்தனர்.
அப்போது சாப்பாடு வழங்கும் இடத்திற்கு தலைமை ஆசிரியர் வந்துள்ளார். அவருக்கும் மாணவர்களுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தலைமை ஆசிரியரை கீழே தள்ளிவிட்டு கடுமையாக தாக்கியுள்ளனர்.
அதோடு மட்டுமல்லாமல் தலைமை ஆசிரியர் அறை, உணவு தயார் செய்யப்படும் அறை ஆகியவற்றையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்க, உடனடியாக அதிரடிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட பள்ளிகள் ஆய்வாளர் தலைமை ஆசிரியர் அறை, மதிய உணவு தயார் செய்யப்பட்ட இடம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்துள்ளார்.
இது பள்ளிக் கூடத்தின் உள் விவகாரம். விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது இதுகுறித்து சொல்ல முடியாது என்றார்.
இந்த பள்ளிக்கூடம் 1876-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் தீபக் பர்மன், பள்ளிக்கூடம் சென்று ஆய்வு செய்வார் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.