

உத்தரகாண்டில் உள்ள காவத் மேளா விழாவில் பிரபல யூடியூபர் தனது நண்பருடன் சேர்ந்து பிச்சை எடுத்து, ஒரு நாள் முடிவில் சுமார் 4,000 ரூபாயை சம்பாதித்துள்ளதாக கூறினார். மேலும் இந்த நிகழ்வு தங்களை மனதளவில் மிகவும் சோர்வடையச் செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஹரித்வாரில் பிரபல யூடியூபர் புரோஷோத்தம் வசிஷ்ட்டும் அவரது நண்பர் சச்சினும் மக்கள் கூட்டம் அதிகள் உள்ள பகுதிகளில் பிச்சை எடுத்து பணம் சம்பாதிப்பது குறித்து ஒரு ஆய்வை செய்ய முயன்றனர். இதற்காக சச்சின் என்பவர் ஒரு பிச்சைக்காரர் போல மாறுவேடம் அணிந்தார்.
சச்சின் தனது தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி, கிழிந்த ஆடைகளை அணிந்து, முகத்தில் அழுக்கைப் பூசி, ஒரு பிச்சைக்காரனைப் போல தோற்றமளிக்க ஒரு சிறிய கிண்ணத்தை ஏந்தியபடி அந்த சோதனையைத் தொடங்கினார்.
மேலும், கூட்டம் நிறைந்த அந்த மேளாவிற்குள் செல்வதற்கு முன்பு, அவர் தனது கழுத்தில் ஒரு UPI QR குறியீட்டையும் தொங்கவிட்டார்.
இந்த வீடியோவை பதிவு செய்த அவர்கள், பிச்சை சோதனையின் போது சச்சின் சுமார் 1,000 அல்லது 2,000 ரூபாய் சம்பாதிப்பார் என்று தாங்கள் எதிர்பார்த்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவர் பிச்சை எடுக்க ஆரம்பித்தபோது, முதல் சில மணிநேரங்களுக்கு வருமானம் குறைவாகவே இருந்தது. சச்சின் பக்தர்களை அணுகியபோது, அவர்களில் பலர், "இல்லை என்று சொன்னேனே” என்று பதிலளித்ததால், அவர் கடும் மன உளைச்சலுக்கு உள்ளானார்.
இருப்பினும் அந்த நபரிடம் இருந்து சச்சின் சுமார் 130 ரூபாய் வசூலித்தார். மற்ற நபர்களோ கனிவுடன் அவருக்கு உதவினர்.
திருவிழா முழுவதும் தொடர்ந்து நடந்து சென்றபோது, சச்சின் கடைக்காரர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் உரையாடத் தொடங்கினார்.
ஒரு சன்கிளாஸ் விற்பனையாளர் அவருக்கு ஒரு ஜோடியைப் பரிசாகக் கொடுத்தார். இதனால் சச்சின், தன்னை ஒரு "தொழில்முறை பிச்சைக்காரர்" என்று வேடிக்கையாக அழைத்துக்கொண்டார்.
இதற்கிடையில், அவரது கழுத்தில் இருந்த கியூஆர் குறியீடு மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வாயிலாக சுமார் 40 ரூபாய் கிடைத்தது.
ஒரு கட்டத்தில், சச்சின் ஒரு உண்மையான பிச்சைக்காரரின் அருகில் அமர்ந்தார். அப்போது அந்தப் பிச்சைக்காரர், தனக்குத் தன் பெயரோ அல்லது தான் முன்பு வசித்த இடமோ நினைவில் இல்லை என்று அவரிடம் கூறினார்.
நான்கு மணி நேரத்திற்குப் பிறகு, சச்சின் 800 ரூபாயை எண்ணினார். இதையடுத்து தொடர்து நடந்த அந்த சோதனையின் போது, அந்த இரண்டு பேரையும் காவலர்கள் விரட்டியடித்தனர். இடைவிடாத மழையும், பல மணி நேர நடையும் அந்த அனுபவத்தை மேலும் மேலும் சோர்வடையச் செய்தன.
சோதனையின் முடிவில், வசிஷ்ட்டும் சச்சினும் சுமார் 4,000 ரூபாய் சேகரித்ததாகக் கூறினர். தினமும் இதே அளவு சம்பாதிக்கும் ஒருவர், ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 1.2 லட்சம் ரூபாய் ஈட்ட முடியும் என்றும் அவர்கள் கணக்கிட்டனர்.
காணொளியின் முடிவில், அந்தப் பணத்திற்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் விலை கொடுக்க வேண்டியிருந்தது என்பதையும் அந்த இருவரும் ஒப்புக்கொண்டனர்.
பிச்சை எடுப்பது மிகவும் சோர்வான செயல் என்றும், நாள் முழுவதும் மக்களை அணுகுவதற்கான ஆற்றலைத் தக்கவைத்துக்கொள்வது கடினம் என்றும் அவர்கள் விவரித்தனர்.
பிச்சை எடுப்பதை விடுத்து, நேர்மையான உழைப்பின் மூலம் சம்பாதிக்குமாறு பார்வையாளர்களை வலியுறுத்தி அவர்கள் அந்தச் சோதனையை முடித்தனர்.
இந்த வீடியோவிற்கு கருத்து தெரிவித்த பயனர்கள், மத மற்றும் சுற்றுலாத் தலங்களில் பிச்சை எடுப்பது, ஒரு வாழ்வாதாரமாகவோ அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாகவோ பெருகிவிட்டதா என்று கேள்வி எழுப்பினர்.
மேலும் உண்மையில் பிச்சை எடுப்பதையே நம்பி வாழும் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை ஒரு நாள் சோதனையால் முழுமையாகப் பிரதிபலிக்க முடியாது என்றும் பயனர்கள் சுட்டிக்காட்டினர்.