

மும்பை புறநகர் ரெயில் முதல் வகுப்பு பெட்டியில் இரண்டு இளைஞர்கள் படுத்துக் கொண்டு உறங்கிய சம்பவம் இணையத்தில் ரெயில்வே போலீசாரின் கவனத்தை பெற்றுள்ளது.
மும்பை போரிவாலி பகுதியில் இருந்து புறநகர் ரெயிலின் முதல் வகுப்பு பெட்டியில் சின்மயி என்ற இளம்பெண் ஒருவர் நேற்று பயணம் செய்துள்ளார்.
அப்போது அந்த முதல் வகுப்பு பெட்டியின் இருக்கைகளில் இரண்டு இளைஞர்கள் கால்களை நீட்டி தூங்கி கொண்டு வந்தனர்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண், அதனை வீடியோவாக எடுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
இதுபோன்ற சம்பவங்கள் தினமும் நிகழ்வதாகவும், தான் அதை தினமும் பார்ப்பதாகவும் இளம்பெண் குறிப்பிட்டார்.
மேலும் அவர், ரெயில்வே பாதுகாப்பு படையினரை குறிப்பிட்டு, உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில் இளம்பெண் சமூக வலைதளத்தில் பகிர்ந்த வீடியோ பயனர்களிடையே விவாதத்தை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து பயனர்கள் வெளியிட்ட பதிவில், “ஒரு முதல் வகுப்பு பெட்டியில் எவ்வாறு இரண்டு இளைஞர்கள் படுத்து கொண்டு வர முடிகிறது” என கேள்வி எழுப்பினர்.
மேலும், அந்த இளைஞர்கள் முறையான ரெயில் டிக்கெட்டை எடுத்தார்களா? எனவும் பயனர்கள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து இளம்பெண் பதிவிட்ட வீடியோ இணையத்தில் ரெயில்வே போலீசாரின் கவனத்தை பெற்றுள்ளது.
இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்த விஷயம் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது” என பதில் அளித்துள்ளனர்.