

8 மாத கால முயற்சிக்குப் பிறகு, டன் கணக்கான குப்பைகளை அகற்றித் தான் சுத்தம் செய்த ஆறு, மீண்டும் ஒரு குப்பைக் கிடங்காக மாறியிருப்பதால் வைரல் இளைஞர் பிட்டு தபாஹி ஏமாற்றம் அடைந்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள அஜ்னார் ஆற்றை பிட்டு தபாஹி என்ற இளைஞர் தனி ஆளாக யாரின் உதவியும் இன்றி சுத்தம் செய்து முடித்தார்.
பிட்டு எந்தவொரு சிறப்பு கருவிகளோ அல்லது பெரிய இயந்திரங்களோ இல்லாமல், தன் கைகளாலேயே அஜ்னார் ஆற்றிலிருந்து குப்பைகளை அகற்றினார்.
பிட்டுவின் உண்மையான பெயர் சுரேந்திர சிங் சௌத்ரி. கன்டென்ட் கிரியேட்டரான இவர் அதனை தொடர்ந்து பதிவும் செய்து வந்தார்.
எனவே அவரின் செயல் வைரலாகி உலக அளவில் அவருக்கு பாராட்டை பெற்றுத் தந்தது. மேலும் 'தி ஓஷன் கிளீனப்' அமைப்பின் டச்சு தலைமை நிர்வாக அதிகாரியான போஜன் ஸ்லார் அவருக்கு வேலை வழங்க முன்வந்தார். ஆனால் அதை நிராகரித்து தான் இந்தியாவில் இதுபோல வேறு ஆறுகளை சுத்தம் செய்ய உள்ளதாக பிட்டு தெரிவித்தார்.
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு சுத்தம் செய்யப்பட்ட ஆற்றங்கரையில், நெகிழிப் பைகள் மற்றும் பிற குப்பைகள் மீண்டும் குவிந்து கிடக்கும் காட்சிகளை பிட்டு சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
பிட்டு டன் கணக்கில் குப்பைகளை அகற்றி ஆற்றங்கரையை சுத்தம் செய்தபோதிலும், அது விரைவில் மீண்டும் குப்பைகளால் நிரம்பியுள்ளது அவருக்கு வருத்தம் அளித்துள்ளது.
தனது எட்டு மாத கால உழைப்பு இப்படி வீணாகும் என்று தான் நினைக்கவில்லை என பிட்டு சமூக வலைதளத்தில் எழுதியுள்ளார்.
பிட்டு பகிர்ந்த காணொளியில், பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிற குப்பைகள் மீண்டும் ஆற்றங்கரையில் குவிந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.
இருப்பினும், மீண்டும் குப்பைக் குவியலைப் பார்த்த பிறகு பிட்டு பின்வாங்கத் தயாராக இல்லை. அஜ்னார் நதியை மீண்டும் சுத்தம் செய்யத் தொடங்கியதாக பிட்டு அந்தக் காணொளியில் கூறினார்.
பிட்டுவின் முயற்சிகளைப் பாராட்டியும், நதி மீண்டும் மாசுபட்டது குறித்துத் தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியும் பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
நதிகளையும் பொது இடங்களையும் சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பு தனி நபருக்கு மட்டும் இருந்தால் போதாது, குப்பைகளை கொட்டும் போக்கைத் தடுக்க கூட்டு முயற்சி தேவை என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர்.