

EPFO 55 வயதுக்குட்பட்ட உறுப்பினர்களுக்கான பணம் எடுக்கும் வரம்பை 75 சதவீதத்திலிருந்து 90 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) விதிகளில் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
EPFO மத்திய அறங்காவலர் குழு, 55 வயதுக்குட்பட்ட உறுப்பினர்களுக்கான பணம் எடுக்கும் வரம்பை 75 சதவீதத்திலிருந்து 90 சதவீதமாக உயர்த்த இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் பொருள், இனி சந்தாதாரர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி இருப்பில் 10 சதவீதத்தை மட்டும் வைத்திருந்தால் போதுமானது. 90 சதவீத பணத்தை தங்கள் தேவைக்கு எடுத்துக்கொள்ளலாம்.
இந்த சீர்திருத்தம், நிதி நெருக்கடி காலங்களில் உறுப்பினர்கள் தங்கள் சேமிப்பை எளிதாக அணுக உதவும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
EPFO ஆன்லைன் போர்ட்டல் மூலம் பிஎப் பணம் எடுப்பதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
இருப்பினும் இதில் கட்டுப்பாடு உள்ளது. தங்களுக்கோ, தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கோ மருத்துவ சிகிச்சை, கல்வி செலவு, தங்களுக்கோ, தங்கள் குடும்பத்தினருக்கோ திருமண செலவு, வீடு வாங்குதல், வீட்டு கடனை செலுத்துதல், வீடு புதுப்பித்தல் உள்ளிட்ட வீட்டுவசதி சேவைகள் மற்றும் குறிப்பிடப்பட்ட பிற சிறப்பு சூழ்நிலைகளின் கீழ் 90 சதவீதம் பணத்தை எடுக்க முடியும். இதன்மூலம் தேவையின்றி உறுப்பினர் 90 சதவீத பணத்தையும் எடுத்து செலவு செய்திடுவதை தடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, வேலையை இழந்த பிறகு முழு வருங்கால வைப்பு நிதி தொகையையும் எடுப்பதற்கான காத்திருப்பு காலம் 12 மாதங்களாக இருந்தது. ஆனால் அது இப்போது வெறும் 2 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இது, வேலையற்றவர்கள் நிதி நெருக்கடியில் இருக்கும்போது தங்கள் பணத்தை விரைவாகப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும்.
மற்றொரு முக்கிய நடவடிக்கையாக, ஓய்வுபெற்ற உறுப்பினர்கள் தங்களது பிஎப் நிதியை ஒரே நேரத்தில் எடுப்பதற்குப் பதிலாக, மாதாந்திர தவணைகளில் எடுக்க முடியும்.
மீதமுள்ள தொகைக்கு EPFO மூலம் தொடர்ந்து வட்டி கிடைக்கும். பயனாளியின் மரணம் ஏற்பட்டால், மீதமுள்ள தொகையை ஒரே நேரத்தில் எடுப்பதற்கோ அல்லது மாதாந்திர தவணைகளை தொடர்ந்து செலுத்துவதற்கோ உயிரிழந்தவரின் நியமனதாரர் முடிவெடிக்கலாம்.