

வங்காள விரிகுடாவில் வலுப்பெற்று வரும் குறைந்த காற்றழுத்தம் காரணமாக பல மாநிலங்களில் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்தம் காரணமாக, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் வேகமாக வலுப்பெற்று வருவதால், இந்தியாவின் பல பகுதிகளில் திடீர் வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த மாற்றம் வரும் நாட்களில் கிழக்கு, மத்திய மற்றும் வட இந்தியாவில் மிதமான முதல் மிக கனமான மழையை கொண்டுவரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
தற்போது, இந்த மாற்றம் வடமேற்கு திசையில் மேற்கு வங்க கடற்கரை மற்றும் அண்டை நாடான வங்கதேசத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
அடுத்த சில மணிநேரங்களில் இது கங்கை சமவெளி மற்றும் ஜார்க்கண்ட் நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
குறைந்த காற்றழுத்தம் மேலும் தீவிரமடைவதால், வானிலை ஆய்வு மையம் பல மாநிலங்களை உயர் எச்சரிக்கை நிலையில் வைத்துள்ளது.
மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நிலைமை தீவிரமடையக்கூடும் என்பதால், அங்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜார்க்கண்டிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கங்கைச் சமவெளி மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய பகுதிகளில் சில இடங்களில் 204.5 மி.மீ-க்கு மேல் மிகக் கனமான மழை பெய்யக்கூடும்.
அதே நேரத்தில், ஜார்க்கண்டில் 115.6 மி.மீ முதல் 204.4 மி.மீ வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படவும், சாலைகள் நீரில் மூழ்கவும், ஆற்று நீர்மட்டம் அபாயகரமாக உயரவும் வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக கிழக்கு இந்தியா மற்றும் 15 மாநிலங்களுக்கு தற்போது மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இவற்றில் அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, கிழக்கு உத்தர பிரதேசம், குஜராத், இமாச்சல பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், லடாக், கேரளா, கொங்கன்-கோவா, மகாராஷ்டிரா, ராஜஸ்தானின் சில பகுதிகள், கர்நாடகா, உத்தரகாண்ட், விதர்பா (மகாராஷ்டிரா) மற்றும் மேற்கு மத்திய பிரதேசம் ஆகியவை அடங்கும்.
இந்த பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும்; மேலும் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தெலங்கானாவின் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஹைதராபாத் மற்றும் அதன் அருகிலுள்ள மாவட்டங்களில், நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அவ்வப்போது மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஆதிலாபாத், நிஜாமாபாத், கரீம்நகர் மற்றும் கம்மம் ஆகிய பகுதிகளில் பிற்பகல் அல்லது மாலையில் குறுகிய நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும்.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள வட கடலோர ஆந்திரா, தென் கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதால் மீனவர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயம் இருப்பதால், அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வீட்டிற்குள் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழை மற்றும் மின்னலின் போது மரங்களின் கீழோ, மின் கம்பங்களுக்கு அருகிலோ அல்லது பலவீனமான கட்டிடங்களுக்கு அருகிலோ நிற்க வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகள் தங்கள் விளைபொருட்கள் நனையாமல் இருக்க, அவற்றை பாதுகாப்பான, உலர்ந்த இடங்களில் சேமித்து வைக்கவும்; கால்நடைகளின் பாதுகாப்பிற்காக அவற்றை உயரமான இடங்களுக்கு நகர்த்துமாறும் வானிலை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.