வழக்கு விசாரணையில் இருந்து தப்பிக்க ஏ.ஐ. மூலம் தான் இறந்துவிட்டதாக ஆவணங்களை தயாரித்த நபர் கைது

போலி ஆவணங்களை தாக்கல் செய்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக சுதந்திரமாக வாழ்ந்து வந்தார்.
File Pic: For Representation
Published on: 

உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு நபர், கொலை குற்றத்தில் இருந்து தப்பிப்பதற்காக தனது மரணத்தை அரங்கேற்றுவதற்கு, செயற்கை நுண்ணறிவை பயன்டுபத்திய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ராஜ்குமார் ராஜ்பாரைக் கைது செய்த பிறகு, அவர் விசாரணைக்கு ஆஜராக உயிருடன் இல்லை என்று கூறி, ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்திருந்ததாக காவல்துறை தெரிவித்தது.

2016-ஆம் ஆண்டு யோகேஷ் சிங் கொலை வழக்கில் ராஜ்பர் மீது விசாரணை நடைபெற்று வந்தது. ஆனால், பின்னர் அவர் மௌ நகராட்சி மன்றத்திடம் இருந்து பெற்ற மரண சான்றிதழை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக சுதந்திரமாக வாழ்ந்து வந்தார்.

அதிரடி கைது:

அக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில், அவர் வசிக்கும் குவாஜஹஹான்பூர் பகுதிக்கு அருகே, கோட்வாலி நகர் காவல்துறையினர், சிறப்பு நடவடிக்கை குழு மற்றும் கண்காணிப்பு குழுவின் உதவியுடன் அவரை கைது செய்தனர். 38 வயதான ராஜ்பர், துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிணையில் இருந்தார்.

விசாரணை நடந்துகொண்டிருந்தபோது, ​​ராஜ்பார் தனது மரணம் குறித்து ஒரு புனைக்கதையை உருவாக்கி, சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்காக போலியான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

2016 டிசம்பர் 19 அன்று முன்ஷிபுரா ரயில் பாதை அருகே யோகேஷ் சிங் சுட்டு கொல்லப்பட்டார். பாதிக்கப்பட்டவரின் மருமகனான அவினாஷ் சிங் அளித்த புகாரின் பேரில், ராஜ்குமார் ராஜ்பார் மற்றும் அவரது நண்பர் சுதர்ஷன் ராஜ்பார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஏ.ஐ. மூலம் மோசடி:

ராஜ்குமார் ராஜ்பார், 2025 மே 30 அன்று காசிப்பூரில் தனது மரணத்தை அரங்கேற்றுவதற்காக, செயற்கை நுண்ணறிவு உதவியுடன் ஒரு திட்டத்தை தீட்டினார். சுடுகாட்டில் உள்ள சிதையில் கிடக்கும் ஒரு உடலின் செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய புகைப்படம் பயன்படுத்தப்பட்டதுடன், உடலுக்கு பதிலாக ஒரு ஆடு தகனம் செய்யப்பட்டது. மரணம் உண்மையானது போல் தோற்றமளிக்க, இறுதி ஊர்வலம் மற்றும் இறுதி சடங்குகளின் புகைப்படங்களும் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது என காவல்துறை தெரிவித்தது. இந்த ஆவணங்களின் அடிப்படையில், ஒரு மரண சான்றிதழ் வழங்கப்பட்டது.

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனூப் குமார் கூறுகையில், 12-ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத ராஜ்குமார் ராஜ்பார், பங்கு சந்தை வர்த்தகராக பணியாற்றி வந்தார். அவர் பல நகரங்களில் உள்ள முக்கிய பிரமுகர்களிடம் இருந்து, பணம் வசூலித்து அதனை சந்தையில் முதலீடு செய்வதாக கூறி வந்துள்ளார். கொலை வழக்கில் சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவும், அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் இருக்கவும் அவர் தனது மரணத்தைத் திட்டமிட்டதாக காவல்துறை குற்றம் சாட்டுகிறது.

அவர் மீது போலி ஆவணம் தயாரித்ததாக ஒரு தனி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, அதே சமயம், அவர் தற்போது 'இறந்தவர்' என்ற நிலையில் இல்லாததால், கொலை வழக்கை எதிர்கொள்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com