

கேரளத்தில் சொத்து தகராறால் கணவரை கொன்ற மனைவி, இயற்கை மரணம் என நாடகமாடியதால் போலீசாரின் தீவிர விசாரணையில் சிக்கினார். பிரேத பரிசோதனையில் கழுத்தில் தழும்பு கண்டுபிடிக்கப்பட்டது. மனைவியின் ஒப்புக்கொள்கையில் கொலை உறுதி செய்யப்பட்டது.
கேரளம் மாநிலம் கொல்லம் மாவட்டம் செருமூடு பகுதியை சேர்ந்தவர் ராஜூ (வயது 53), ஓவியர். இவரது மனைவி லேகா மேரி. வெளிநாட்டில் பணிபுரிந்த இவர், தற்போது கணவருடன் கொல்லத்தில் வசித்து வருகிறார். இவர்களுக்கு இடையே அடிக்கடி சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக சில காலம் லேகா மேரி கணவரை பிரிந்து மத்திலில் பகுதியில் உள்ள தனது சகோதரி வீட்டில் தங்கி இருந்துள்ளார்.
பின்னர் உறவினர்கள் சமரசத்திற்கு பிறகு அவர், கணவர் வீட்டிற்கு வந்து உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த ராஜூ மயங்கி விழுந்ததாக அருகில் வசிக்கும் அவரது தம்பியிடம் லேகா மேரி தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர் விரைந்து வந்து ராஜூவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு ராஜூ இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக இயற்கை மரணம் என குந்தாரா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ராஜூ உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், மயங்கி விழுந்ததாலோ அல்லது தலை சுற்றல் காரணமாகவோ ராஜூ இறந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும், அவரது கழுத்தைச் சுற்றி ஒரு தழும்பு காணப்படுவதாகவும் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், ராஜுவின் வீட்டிற்கு சென்று, அவரது மனைவியிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது லேகா முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்டனர். இதில் லேகா சொத்துக்காக கணவரை கொலை செய்திருப்பது தெரிய வந்தது. சொத்து தொடர்பாக சம்பவத்தன்றும் தகராறு ஏற்பட்டது. பின்னர் கணவர் ராஜூ தூங்கி விட்டார். அவர் மீது ஆத்திரத்தில் இருந்த நான் (லேகா மேரி) பெல்ட்டால் கணவரின் கழுத்தை இறுக்கினேன். இதில் அவர் இறந்து விட்டார் என போலீசாரிடம் லேகாமேரி தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி லேகாமேரியை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ராஜூவின் குடும்பத்திற்கு கூட்டாக இருந்த சொத்து, பின்னர் அவர் பெயருக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் சொத்தின் முழு உரிமையும் தனக்கே வேண்டும் என்று லேகா வலியுறுத்தினாராம். இது தொடர்பாகவே அவர்களுக்குள் தகராறு இருந்து வந்து உள்ளது. இந்த சம்பவத்தில் போலீசாருக்கு மேலும் சில சந்தேகம் எழுந்துள்ளது.
கொலை சம்பவத்திற்கு முன்பு ராஜுவுக்கு மயக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அல்லது அதிகப்படியான மாத்திரைகள் ஏதேனும் கொடுக்கப்பட்டதா? இதற்காக உடலின் உள்ளுறுப்பு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன. இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து குந்தரா போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.