எரிபொருள் விலை ஏன் குறையவில்லை? எண்ணெய் நிறுவனங்களின் ரூ.74,781 கோடி இழப்பை சுட்டிக்காட்டும் அரசு!

நுகர்வோர் பாதிக்கப்படாமல் இருக்க கடந்த 4 மாதங்களாக நட்ட விலைக்கே எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருட்களை விற்பனை செய்தன.
எரிபொருள் விலை ஏன் குறையவில்லை? எண்ணெய் நிறுவனங்களின் ரூ.74,781 கோடி இழப்பை சுட்டிக்காட்டும் அரசு!
Published on

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை சரிந்திருந்தாலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உடனடியாக குறைய வாய்ப்பில்லை என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக ஒப்பந்தம் எட்டப்பட்டதன் விளைவாக தற்போது கச்சா எண்ணெய் விலைகள் குறைந்திருந்தாலும், மேற்கு ஆசிய நெருக்கடியின் உச்சக்கட்டத்தில் வாங்கிய கச்சா எண்ணெயைத்தான் தற்போது இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சுத்திகரித்து வருவதாகவும்,

இதனால் இப்போது எண்ணெய் விலை குறைப்புக்கு வாய்ப்பு இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர்,

“இரண்டு மாதங்களுக்கு முன்பு (அப்போதைய விலையில்) நாங்கள் வாங்கிய கச்சா எண்ணெய் இருப்பைத்தான் இன்று பயன்படுத்தி வருகிறோம். தற்போதைய கச்சா எண்ணெய் விலைசரிவு இன்னும் 2-3 மாதங்களுக்குத் தொடர்ந்தால், பார்க்கலாம்.

கடந்த நான்கு மாதங்களில் 1,07,000 சில்லறை விற்பனை நிலையங்களில் எதிலும் பற்றாக்குறையோ அல்லது மூடலோ இல்லாமல் அரசு சிறப்பாக செயல்பட்டது.” என தெரிவித்தார்.

அப்போது நயாரா நிறுவனம் (தனியார்) விலை குறைத்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்,

“நெருக்கடி காலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை ரூ.5 உயர்த்தியதால், நயாரா நிறுவனம் தற்போது விலையைக் குறைத்துள்ளது. அந்த விலை உயர்வை அவர்கள் இப்போதுதான் திரும்பப் பெற்றுள்ளனர்.

அப்போது அரசு பொது நிறுவனங்கள் விலையை உயர்த்தவில்லை.” எனக் கூறினார்.

மேலும் ஜூன் 30 வரை நுகர்வோர் பாதிக்கப்படாமல் இருக்க பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி ஆகியவற்றை அடக்க விலையை விடக் குறைவான விலைக்கு விற்பனை செய்ததால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.74,781 கோடி இழப்பு ஏற்பட்டதாவும் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com