நியாயமான தேர்தல் நடைபெறும் வரை போராட்டத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை - அபிஜீத் தீப்கே

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி காக்ரோச் ஜனதா கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
Abhijeet Dipke
Published on: 
Summary

காக்ரோச் ஜனதா கட்சி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகுமாறு டெல்லியில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், இன்று தான் கைது செய்யப்பட்டாலும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யாமல் பின்வாங்க போவதில்லை என அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் நடத்தி வரும் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடவடிக்கைக்கு எதிராக, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி காக்ரோச் ஜனதா கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

மேலும் இந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்க வலியுறுத்தி சிஜேபி கட்சி அக்டோபர் 10 அன்று 'சலோ டெல்லி' என்ற பேரணிக்கு அழைப்பு விடுத்தது.

சிஜேபி அறிவிப்பை தொடர்ந்து, தேசிய தலைநகர் டெல்லியில் 163-வது பிரிவின் கீழ் தடை உத்தரவுகள் அமலில் உள்ளதாகவும், அனுமதியற்ற கூட்டங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தெரிவித்தது.

ரெயில் சேவைகள் ரத்து

இதையடுத்து டெல்லிக்கு செல்லும் பல ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு காவல்துறை அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதால், விமான போக்குவரத்திற்கான கடைசி நேர முன்பதிவுகளின் விலை அதிரித்து காணப்பட்டது.

கட்டண உயர்வு

வாரணாசியில் இருந்து டெல்லி செல்லும் ஸ்பாட் கட்டணங்கள் ஒரு மாதத்திற்கு முன்பு இருந்ததை விட 15% உயர்ந்தது.

அமிர்தசரஸில் இருந்து புறப்படும் விமானக் கட்டணங்கள் சுமார் ரூ.4.000 வரை உயர்ந்தது. லூதியானாவில் இருந்து புறப்படும் விமானத்திற்கான கட்டணங்களும் ரூ.4.301 இல் இருந்து ரூ. 12,987 வரை உயர்ந்தது.

இளைஞர்களுக்கு அழைப்பு

இந்த நிலையில் டெல்லியில் நடைபெறவுள்ள போராட்டத்தில் பெருமளவிலான இளைஞர்கள் கலந்துகொள்ள வேண்டும் என காக்ரோச் ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “நான் தடுத்து வைக்கப்பட்டாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ கூட எனக்குப் பயமில்லை.

அரசு என் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தையோ (NSA) அல்லது சட்டவிரோதத் தடுப்புச் சட்டத்தையோ (UAPA) பிரயோகிக்கலாம்.

தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும். சிறப்பு தீவிர திருத்தத்தை (SIR) ரத்து செய்ய வேண்டும், மேலும் தேர்தல் ஆணையரை நியமிப்பதற்கான நடுநிலையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

இது நமது நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான போராட்டம். போராட்டத்தை அமைதியான முறையில் நடத்த வேண்டும், ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை அது தொடர வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

அரசு ஜென் Z தலைமுறைக்கு அஞ்சுகிறது

முன்னதாக போராட்டம் குறித்து அபிஜீத் தீப்கே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், போராட்டத்தை ஒடுக்கும் அரசின் தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார். போராட்டக்காரர்களை தடுப்பதற்காக மத்திய அரசு பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அரசு ஜென் Z தலைமுறைக்கு அஞ்சுகிறது என்றும், இளைஞர்களைக் கண்டு உங்களுக்கு அவ்வளவு பயம் என்றால், நாடு முழுவதையும் முடக்கிவிடுங்கள்,” என்றும் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com