VIDEO: ஜந்தர் மந்தருக்குள் அத்துமீறி Gate ஏறி குதித்த CJP நிர்வாகிகள் கைது!

ஐக்கிய ஜனதா தளம் அலுவலக வளாகத்தின் பக்கத்திலிருந்து ஒரு கேட்டைத் தாண்டி ஜந்தர் மந்தரின் ஒரு பகுதிக்குள் நுழைந்தனர்.
CJP
Published on: 
Summary

ஜந்தர் மந்தரில் அத்துமீறி கேட் ஏறி குதித்த சிஜேபியினர் கைது செய்யப்பட்டனர்

டெல்லி ஜந்தர் மந்தரில் இனி போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என டெல்லி காவல்துறை நேற்று அறிவித்தது. ராம்லீலா மைதானம் உள்ளிட்ட 3 மைதானங்களை போராட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் ராம்லீலா மைதானதில் இந்த ஆண்டு ஏற்கனவே பல நிகழ்வுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே வெறும் 3 நாட்கள் மட்டுமே, அதுவும் டிசம்பரில் மட்டுமே முன்பதிவு இருக்கிறது.

தேர்தல் மற்றும் எஸ்ஐஆர் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சிஜேபி போராட்டம் நடத்த முயன்று வருகிறது. கடந்த சனிக்கிழமை ஜந்தர் மந்தரில் கூட முயன்ற சுமார் 7000 பேர் வரை கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

போராட்டம்

இதைத்தொடர்ந்து அமைதியான போராட்டங்களில் ஈடுபடுபவர்களை ஒடுக்க கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. எனவே தற்போது ஜந்தர் மந்தரில் போராட்டம் நடதக்கூடாது என்ற சட்டரீதியான நடைமுறை மூலம் போராட்டங்களை கட்டுப்படுத்த டெல்லி காவல்துறை முயற்சி எடுத்துள்ளது.

அதேநேரம் போராட்டங்களுக்கு சிஜேபியினர் தொடர்ந்து அனுமதி கோரி வருகின்றனர். நேற்று உச்சநீதிமன்றம் நோக்கி ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி ஒருபுறமும், சிஜேபியினர் ஒருபுறமும் தனித்தனியே பேரணி நடத்தினர்.

இந்த சூழலில் இன்று போராட்டங்களுக்கு தடை செய்யப்பட்ட ஜந்தர் மந்தரில் அத்துமீறி நுழைய முயன்ற சிஜேபி நிர்வாகிகள் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது

சிஜேபி நிர்வாகிகள் அஜிங்க்யா ஷிண்டே, அஷுதோஷ் ரங்கா, சௌரவ் தாஸ் மற்றும் மற்ற உறுப்பினர்கள், ஐக்கிய ஜனதா தளம் அலுவலக வளாகத்தின் பக்கத்திலிருந்து ஒரு கேட்டைத் தாண்டி ஜந்தர் மந்தரின் ஒரு பகுதிக்குள் நுழைந்தனர்.

சௌரவ் தாஸ் உட்பட அவர்கள் அனைவரையும் டெல்லி காவல்துறை கைது செய்தது. இவ்விவகாரத்தில் காவல்துறை முதல் தகவல் அறிக்கையையும் பதிவு செய்ய உள்ளது.

கைது செய்யப்படுவதற்கு முன்பு, ரங்கா, தாஸ் மற்றும் சில ஆதரவாளர்கள் ரகசியமாக உள்ளே நுழைவதைகாட்டும் ஒரு வீடியோ கிளிப்பை எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்தியா கூட்டணி

இதனிடையே தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான தங்களது பிரச்சாரத்தின் எதிர்கால வியூகம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பேச, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட பிற இந்திய அணித் தலைவர்கள் இன்று கூட்டாக செய்தியாளர் சந்திப்பு நடத்துவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சிகளின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குவிப்பு

போராட்டங்களுக்கு மத்தியில் டெல்லியில் 20,000 துணை ராணுவப் படையினரை நிலைநிறுத்தும் திட்டம், நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிதாக அறிவிக்கப்பட்ட மூன்று போராட்டத் தளங்களின் பாதுகாப்பு ஆய்வும் நிறைவடைந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com