

கர்நாடகாவை சேர்ந்த 2 வயது சிறுமி அருமையாக தபலா வாசித்து இந்திய சாதனைப் புத்தகத்தில் (India Book of Records) இடம்பிடித்திருக்கிறாள்.
கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டத்தின் ஹொன்னவரா பகுதியைச் சேர்ந்த 2 வயது 10 மாதங்கள் நிரம்பிய சிறுமி ஸ்வராஸ்ரீ ஹெக்டே.
ஸ்வராஸ்ரீயின் தந்தை குருராஜ் ஹெக்டே ஒரு புகழ்பெற்ற தபலா கலைஞர். தாய் ஸ்ரீலதா ஒரு ஹிந்துஸ்தானி பாடகி மற்றும் ஆங்கிலப் பேராசிரியர் ஆவார்.
தங்கள் மகள் ஒரு வயதிலிருந்தே தபலாவில் ஆர்வம் காட்டி, அதன் மீதே உறங்குவாள் என்று பெற்றோர் கூறினர்.
அவளது ஆர்வத்தைக் கவனித்த தந்தை, மற்ற மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும்போது ஸ்வராஸ்ரீயைத் தன் அருகில் அமர வைத்துப் பயிற்சி அளித்தார்.
மேலும், அவளுக்கென இரண்டு சிறிய தபலாக்களையும் பிரத்யேகமாக தயாரித்திருந்தார்.
இந்நிலையில் பெயருக்கு ஏற்றாற்போல ஸ்வராஸ்ரீ, 12 வகையான தாளங்களையும், அவற்றின் Vocal Recitation-யும் எந்த தவறுகளும் இன்றி கற்று வாசித்து மிக இளம் வயது தபலா கலைஞர் என்ற சாதனையை படைத்து இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்திருக்கிறாள்.
ஸ்வராஸ்ரீ தபலா வாசிக்கும் காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.