செங்கோட்டையில் நடக்கும் 80-ஆவது சுதந்திர தின விழாவில் இசைக்கப்படும் வந்தே மாதரம்

தேசிய கொடியை ஏற்றுவதற்காக பிரதமரை கோட்டையின் மதில் சுவரில் உள்ள மேடைக்கு அழைத்துச் செல்வார்.
independence day
Published on

சுதந்திர தின கொண்டாட்டங்களின் வரலாற்றில் முதன்முறையாக, ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று செங்கோட்டை வளாகத்தில் நடைபெறவுள்ள 80-ஆவது ஆண்டு விழாவின்போது 'வந்தே மாதரம்' பாடல் இசைக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்படும்.

'வந்தே மாதரம்' பாடலின் நீடித்த பாரம்பரியத்தின் 150-வது ஆண்டை கொண்டாடுவதற்காகவும், "2047-க்குள் 'விக்சித் பாரத்' என்ற இலக்கை நோக்கி இந்தியாவின் பயணத்தை முன்னெடுப்பதில் 'யுவ சக்தி'யின் (இளைஞர் சக்தியின்) ஆற்றல், லட்சியங்கள் மற்றும் முக்கிய பங்களிப்பை கொண்டாடுவதற்காகவும்" இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

பிரதமர் தலைமை:

செங்கோட்டையில் நடைபெறவுள்ள 80-வது சுதந்திர தின விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குவார். செங்கோட்டைக்கு வருகை தரும் பிரதமரை, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அவரது துணை அமைச்சர் சஞ்சய் சேத் மற்றும் பாதுகாப்பு துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆகியோர் வரவேற்கவுள்ளனர்.

வரவேற்பை தொடர்ந்து காவல் மரியாதை அணிவகுப்பை பார்வையிட்ட பிறகு, பிரதமர் மோடி செங்கோட்டையின் முகப்பு பகுதிக்கு செல்வார். டெல்லி மண்டலத்தின் பொது அதிகாரி, தேசிய கொடியை ஏற்றுவதற்காக பிரதமரை கோட்டையின் மதில் சுவரில் உள்ள மேடைக்கு அழைத்துச் செல்வார்.

"ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் டெல்லி காவல்துறை ஆகியவற்றில் இருந்து தலா ஒரு அதிகாரி மற்றும் 32 வீரர்களை கொண்ட 'தேசியக் கொடி பாதுகாப்புப் படை', பிரதமர் தேசிய கொடியை ஏற்றும்போது 'ராஷ்ட்ரிய சல்யூட்' அளிக்கும். முப்படைகள் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த இந்த கூட்டு பாதுகாப்பு படை மேஜர் லோகேந்திர சிங் ஷெகாவத் வழிநடத்துவார்," என்று அமைச்சகம் தெரிவித்தது.

வந்தே மாதரம்:

கொடி ஏற்றப்பட்ட பிறகு, மூவர்ணக் கொடிக்கு 'ராஷ்ட்ரிய சல்யூட்' மரியாதை அளிக்கப்படும்.

"ஒரு ஜூனியர் கமிஷன்ட் அதிகாரி மற்றும் 25 வீரர்களை கொண்ட ராணுவ இசைக்குழு 'வந்தே மாதரம்' பாடலின் இசையை வாசிக்கும். அதை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்படும். இந்த இசைக்குழுவை சுபேதார் ஈஸ்வர் சிங் வழிநடத்துவார்," என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com