

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள மாயாபூர் பிப்பல் கோட்டி பகுதியில் ‘விஷ்ணு காட்-பிப்பல்கோட்டி’ நீர்மின் நிலைய பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பெரிய அளவிலான சுரங்கம் தோண்டப்பட்டு பணிகள் நடக்கிறது.
நேற்று இந்த பணியில் பீகார், ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 22-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை திடீரென்று சுரங்கத்தில் பலத்த சத்தத்துடன் தண்ணீர் புகுந்ததால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் இடிபாடுகளுக்குள் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
சுரங்கப்பாதையின் நுழைவு வாயிலில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் இந்த விபத்து நடந்துள்ளது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்திய-திபெத் எல்லைக் காவல் படை, ராணுவம் மற்றும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுரங்கத்திற்குள் பெருக்கெடுத்து ஓடும் நீரை கடக்க மீட்பு குழுவினர் சிறப்புப் படகுகளைப் பயன்படுத்தினர்.
சுரங்கப்பாதையில் அதிக அளவு தண்ணீர் நிரம்பியிருந்ததாலும், பக்கவாட்டிலும் தண்ணீர் கசிந்ததாலும் மீட்புப் பணி சவாலாக இருந்தது. சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி, தண்ணீரில் சிக்கியவர்களைக் குழுவினர் மீட்டனர்.
முதற்கட்ட மீட்புப் பணிகளுக்குப் பிறகு, பல தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர். எனினும் இந்த விபத்தில் 9 பேர் பலியாகினர். மேலும் சில தொழிலாளர்களைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது.
மீட்கப்பட்ட 14 தொழிலாளர்கள் படுகாயத்துடன் உடனடியாக அருகில் உள்ள கோபேஷ்வர் மற்றும் பிப்பல்கோட்டி மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பலியானவர்கள் டெஹ்ரியைச் சேர்ந்த பிரதீப் சிங் பவார், சமோலியைச் சேர்ந்த முகேஷ், பீகாரைச் சேர்ந்த துர்லப் சர்மா, ஜார்க்கண்டைச் சேர்ந்த விஜய், ஜிதேந்திரா, லோகேஷ்வர், புவனேஸ்வர் உள்ளிட்டோர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மீட்பு பணியின்போது அதில் ஈடுபட்ட ஒரு எந்திரம் சிக்கி சேதம் அடைந்தது. இதையடுத்து மாற்று வழிகள் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்றன. சமோலி மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாகவே விபத்து நடந்து உள்ளது.
உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்டுத் தீவிரப்படுத்தினார். மேலும், பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், அம்மாநில முதலமைச்சர்களுடன் தொலைபேசியில் பேசி நிலைமைகளை விளக்கி உள்ளார்.
மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் காணொளிக் காட்சி மூலம் நேரடியாகத் தொடர்புகொண்டு அவர்களின் நலம் விசாரித்தார். மாநில அரசு அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும் என்றும், அவர்களின் சிகிச்சை மற்றும் மறுவாழ்விற்காக உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் அவர்களுக்கு உறுதி உளித்தார். மேலும் விபத்து நடந்த சுரங்கத்தை இன்று முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி பார்வையிட்டார்.