

இந்தியாவைச் சேர்ந்தவர்கள் வெளிநாட்டிற்கு குறிப்பாக அமெரிக்கா செல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அமெரிக்கா செல்வதற்கான விசாவை தூதரகம் மூலம் பெறலாம்.
பெற்றோர் தங்களுடைய மைனர் குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டும் என்றாலும் விண்ணப்பிக்க வேண்டும். முன்னதாக, பெற்றோர்கள் தங்களுடைய மைனர் குழந்தைகளை அழைத்துச் செல்ல தேவையில்லை. விண்ணப்பத்தை பூர்த்தி செய்தால் மட்டும் போதுமானது என்று தெரிகிறது.
இந்த நிலையில் இனிமேல் மைனர் குழந்தைகளுக்கு விசா வேண்டி விண்ணப்பம் செய்யும்போது, அதிகாரிகள் விண்ணப்பத்தை பரிசீலனை செய்யும் போது நேர்காணலுக்காக மைனர் குழந்தைகளை கையோடு அழைத்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது பிறந்த பச்சிளம் குழந்தைகள் என்றாலும் சரி, 17 வயது சிறுவன் மற்றும் சிறுமி என்றாலும் சரி நேரடியாக அழைத்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க விசா நடைமுறையில் தூதரக நேர்காணல் ஒரு முக்கியமான பகுதியாகும். இது விண்ணப்பதாரர்களை மதிப்பிட விசா அதிகாரிகளுக்கு உதவுவதுடன் எல்லைப் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவும் அமைகிறது.
அமெரிக்காவின் எல்லையை பாதுகாப்பாக வைத்திருப்பது மிக முக்கியமானது. விசா நடைமுறையின் மூலம் தேசியப் பாதுகாப்பு மற்றும் பொதுப் பாதுகாப்புக்கான தரநிலைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதில் அமெரிக்க வெளியுறவுத் துறை உறுதியாக இருக்கிறது என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
சிறு வயதுடைய குழந்தைக்கு அமெரிக்க விசா கோரி விண்ணப்பிக்கும் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள், குழந்தையின் வயதைப் பொருட்படுத்தாமல், திட்டமிடப்பட்ட தூதரக நேர்காணலுக்குக் குழந்தையை அழைத்துச் செல்லத் திட்டமிட வேண்டும்.
தூதரகத்தின் இந்த சமீபத்திய விளக்கத்தின்படி, கைக்குழந்தை அல்லது குறிப்பிட்ட வயதுக்குட்பட்ட குழந்தை நேரில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளத் தேவையில்லை என்று பெற்றோர்கள் கருதக்கூடாது. விசா நேர்காணலின் போது, தூதரக அதிகாரி நேரில் பார்க்கும் வகையில் அனைத்து சிறு வயது விண்ணப்பதாரர்களும் அங்கு இருக்க வேண்டும்.