

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரி காக்ரோச் ஜனதா போராட்டம் நடத்தி வரும் சூழலில், அக்கட்சியை தேச விரோத சக்திகள் என நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத் விமர்சனம் செய்துள்ளார்.
டெல்லி ஜந்தரில் தேர்தல் ஆணையம் நடத்தி வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடவடிக்கைக்கு எதிராகவும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக கோரியும் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்க வலியுறுத்தி சிஜேபி கட்சி நேற்று 'டெல்லி சலோ' என்ற பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இதையடுத்து சிஜேபி அறிவித்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக அரசியல் கட்சி தலைவர்களும், இளைஞர்களும் டெல்லி நோக்கி படையெடுத்தனர்.
சிஜேபி அறிவிப்பை தொடர்ந்து, தேசிய தலைநகர் டெல்லியில் 163-வது பிரிவின் கீழ் தடை உத்தரவுகள் அமலில் உள்ளதாகவும், அனுமதியற்ற கூட்டங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்தது.
இதையடுத்து டெல்லிக்கு செல்லும் மெட்ரோ ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 40,000 அதிகமான அளவில் டெல்லி காவல்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய ஆயுத காவல் படையினர் குவிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த முயன்ற 2,000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
டெல்லி ஜந்தரில் நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக மும்பையில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் வந்த சிஜேபி கட்சியை சேர்ந்த அபிஜீத் தீப்கே, செளரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து காவல்துறையால் கைது செய்யப்பட்டு மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட சிஜேபி கட்சி தலைவர் மற்றும் நிர்வாகிகள், ஓராண்டு காலத்திற்கு நாட்டில் அமைதியை காக்கும்படி நிபந்தனையுடன் நீதிமன்றம் விடுதலை செய்தது.
இந்த நிலையில் அயோத்தியில் ராமர் கோவிலுக்கு வருகை தந்த எம்.பி. கங்கனா ரனாவத்திடம் சிஜேபி போராட்டம் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர், குடிமக்களுக்கு எந்தவிதமான அசெளகரியமும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.
மேலும் அவர் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைமையை தேச விரோத சக்திகள் என விமர்சனம் செய்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், “இந்த தேசவிரோத சக்திகளை மக்கள் இப்போது எப்படி அம்பலப்படுத்துகிறார்கள் என்று பாருங்கள்.
காவல்துறையை விடுங்கள், இப்போது சாதாரண மக்களும் சிஜேபி கட்சிக்காரர்களை பிடித்து அவர்களிடம் பதில்களை கேட்பார்கள். ஏனென்றால் மக்கள் அவர்களை அடையாளம் காண தொடங்கிவிட்டனர்” என்று கூறினார்.